search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் கல்வீச்சு: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 21 பேர் கைது
    X

    பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் கல்வீச்சு: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 21 பேர் கைது

    பா.ஜனதாவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது கல்வீச்சு நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 21 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சீர்காழி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்து கோவில்கள் குறித்து பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா சார்பில் நாகை மாவட்டம் சீர்காழியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நாகை மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் ஈழவேந்தன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது திருமாவளவனை கண்டித்து பேசினர்.

    அப்போது அங்கு விடுதலை சிறுத்தைகள் ஆத்திரம் அடைந்து ஆர்ப்பாட்டம் செய்த பா.ஜனதாவினர் மீது கல்வீசினர். இதனால் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த அன்புசெல்வன், கனகசபை, மாசிலாமேரி உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். உடனே அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் தாக்குதலை கண்டித்து சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபம் அருகில் பா.ஜனதா கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசார் பா.ஜனதாவினரிடம் மறியலை கைவிட கோரி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கல்வீசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். இதையடுத்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்த பிறகே பா.ஜனதாவினர் கலைந்து சென்றனர்.

    இதைதொடர்ந்து பா.ஜனதாவினர் மீது கல்வீசிய சம்பவத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

    முன்னாள் மாவட்ட செயலாளர் ஸ்டாலின், வக்கீல்கள் குணவேந்தன், ராஜேஷ், மாவட்ட துணை செயலாளர்கள் காமராஜ், கனிவண்ணன், தொகுதி செயலாளர் தாமு இனியவன் உள்பட 21 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    பா.ஜனதா- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதலால் சீர்காழி பகுதியில் நேற்று இரவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள்.
    Next Story
    ×