search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் - கர்நாடகாவில் புதுவை மீனவர்கள் 22  பேர் மீட்பு: முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்
    X

    குஜராத் - கர்நாடகாவில் புதுவை மீனவர்கள் 22 பேர் மீட்பு: முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்

    குஜராத் - கர்நாடகாவில் புதுவை மீனவர்கள் 22 பேர் மீட்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் காலாப்பட்டு முதல் புதுக்குப்பம் வரை 18 மீனவ கிராம பஞ்சாயத்து உள்ளது. இப்பகுதியில் உள்ள மீனவர்கள் நாட்டின் பல பகுதிகளில் உள்ள மீன்பிடி துறைமுகத்துக்கு சென்று ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதுபோல் நரம்பை பகுதியை சேர்ந்த மீனவர்கள் கந்தநாதன், அருள்ராஜ், ஆறுமுகம், ஆனந்த், மணிகண்ட பிரபு ஆகிய 5 பேர் கொச்சினில் ஆழ்கடல் விசைப்படகு உரிமையாளரிடம் பணி புரிந்து வருகின்றனர்.

    இவர்கள் கொச்சினில் இருந்து கடலில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒக்கி புயல் தாக்கியது. இதில் மீனவர்களின் படகு புயலில் சிக்கி இழுத்து செல்லப்பட்டது.

    லட்சத்தீவில் ஒரு தீவில் மீனவர்கள் கரை ஒதுங்கினர். அப்பகுதியில் வாழும் மக்கள் அவர்களுக்கு தஞ்சம் அளித்து உணவளித்தனர். பின்னர் மீனவர்கள் தங்கள் குடும் பத்துக்கும், புதுவை அரசுக்கும் தங்களை மீட்கும்படி தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி லட்சத்தீவு நிர்வாகியிடம் போனில் பேசினார். மேலும் கடலோர காவல் படை, கப்பல்படை அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு மீனவர்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினார்.

    இதையடுத்து மீனவர்கள் மீட்கப்பட்டு கொச்சின் அனுப்பி வைக்கப்பட்டனர். கொச்சினில் இருந்து அழைத்து வரப்பட்ட மீனவர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோர் இன்று சந்தித்து நலம் விசாரித்தனர். புயல் பாதிப்பில் சிக்கிய விவரங்களை கேட்டறிந்தனர்.

    பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை குருசுகுப்பம், நல்லவாடு பகுதியை சேர்ந்த 22 மீனவர்கள் 3 படகுகளில் குஜராத் பகுதியில் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்களும் புயலில் சிக்கி அப்பகுதியில் உள்ள ஒரு துறைமுகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் புதுவைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

    கர்நாடகா மாநிலம் மாண்டே பகுதியிலும் புதுவை மீனவர்கள் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் டீசல், உணவு இன்றி தவிப்பதாக தகவல் கிடைத்தது. அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொச்சின் துறைமுகத்துக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    குஜராத், கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு அரசுடன் பேசி பாதிக்கப்பட்டுள்ள புதுவை மீனவர்களை மீட்டு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம், சேதமடைந்த படகுகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தலைமையில் கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும். மீனவர்களை மீட்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×