search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிச்சாமி
    X
    எடப்பாடி பழனிச்சாமி

    ஒக்கி புயல் பாதிப்பு: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குமரியில் இன்று ஆய்வு

    குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று குமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தை ஒக்கி புயல் கடந்த 30-ந்தேதி தாக்கியதில் மாவட்டம் முழுவதும் பெரும் சேதத்தை சந்தித்தது. சூறாவளி காற்றுடன் சுழன்று அடித்த மழையால் மாவட்டம் முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் உடைந்து விழுந்தன.


    இதுவரை சந்தித்திராத வகையில் இந்த புயல் குமரி மாவட்டத்தையே புரட்டிப் போட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் இருளில் மூழ்கியது.

    மேலும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களும் இந்த புயலில் சிக்கி கரை திரும்ப முடியாமல் மாயமானார்கள். நேற்று இரவு அரசு வெளியிட்டுள்ள பட்டியல்படி 433 மீனவர்கள் மாயமாகி உள்ளதாகவும் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.


    ஒக்கி புயல் பாதிப்பில் இருந்து குமரி மாவட்டத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டது. தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, உதயக்குமார் ஆகியோர் குமரி மாவட்டத்திற்கு வந்து சேதங்களை பார்வையிட்டு மீட்புபணிகளை துரிதப்படுத்தினார்கள்.


    மேலும் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் ஆய்வு மேற்கொண்டனர். எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களும் குமரி மாவட்டத்திற்கு வருகை தந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

    மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ராமச்சந்திரன், ககன்தீப் சிங்பேடி, ஜோதிநிர்மலா உள்பட பலர் குமரி மாவட்டத்தில் முகாமிட்டு சேத விவரங்களை நேரில் பார்வையிட்டு அறிக்கை தயாரித்து உள்ளனர்.

    மேலும் கடலில் மீன்பிடிக்க சென்று உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியும் அறிவிக்கப்பட்டது. இதே போல உயிரிழந்த விவசாயிகள், பொதுமக்களுக்கும் நிதிஉதவியும், நிவாரணமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஒக்கி புயல் தாக்கி 13 நாட்கள் ஆனபிறகும் குமரி மாவட்டம் இன்னும் இயல்புநிலைக்கு திரும்பவில்லை. மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்னும் முழுமையாக மின்வினியோகம் செய்யப்படாத நிலை உள்ளது. தொடர்ந்து நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிடவும் விவசாயிகள், மீனவர்களை சந்தித்து நேரில் ஆறுதல் கூறவும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று குமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

    இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்படும் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி விமானம் நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து கார் மூலம் குமரி மாவட்டம் வருகிறார். மாவட்ட எல்லையான காவல்கிணறில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், விஜயகுமார் எம்.பி. மற்றும் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    அதைதொடர்ந்து தோவாளை, வெள்ளிமலை ஆகிய பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களை எடப்பாடி பழனிச்சாமி பார்வையிடுகிறார். பிறகு அங்கிருந்து கார் மூலம் தூத்தூர் செல்கிறார். அங்கு யூதா கல்லூரியில் மீனவர் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கேட்டறிந்து ஆறுதல் கூறுகிறார்.

    அதைதொடர்ந்து நாகர்கோவில் வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இங்கு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மாயமான மீனவர்களை மீட்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் புயல் நிவாரண பணிகள் பற்றி கேட்டறிகிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குமரி மாவட்டம் வருகையை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 



    Next Story
    ×