search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரியில் மீனவர்கள் போராட்டம்: 17 பாதிரியார்கள் உள்பட 14 ஆயிரம் பேர் மீது வழக்கு
    X

    குமரியில் மீனவர்கள் போராட்டம்: 17 பாதிரியார்கள் உள்பட 14 ஆயிரம் பேர் மீது வழக்கு

    ஒக்கி புயலில் சிக்கி மாயமான குமரி மீனவர்களை கண்டு பிடிக்கக்கோரி போராட்டம் நடத்திய 17 பாதிரியார்கள் உள்பட 14 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இருந்து கடந்த மாதம் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 30-ந்தேதி வீசிய ஒகி புயலில் சிக்கிக்கொண்டனர்.

    புயலில் மாயமான மீனவர்களை கடற்படை, கடலோர காவல் படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தேடி வருகிறது. இவர்களில் நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டனர். சிலரது உடல்களும் கரை ஒதுங்கியது. இன்னும் பலர் கண்டுபிடிக்கப்படவில்லை.

    இவர்களை கண்டு பிடிக்ககோரி குமரி மாவட்ட மீனவர்கள் கடந்த 8-ந்தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

    நீரோடி துறையில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நடைபயணமாக புறப்பட்டு குழித்துறை ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தினர். இது போல குழித்துறை சந்திப்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மறுநாள் 9-ந்தேதி குளச்சலில் பஸ் மறியலும், ஆர்ப்பாட்டமும் நடந்தது. அன்றே மணவாளக்குறிச்சி, கடியப்பட்டணம், கல்லுக்கட்டி சந்திப்பு, கன்னியாகுமரி பழைய பஸ் நிலையம் பகுதியிலும் போராட்டங்கள் நடந்தன.

    4-வது நாளாக நேற்று ராஜாக்கமங்கலம் துறை, முட்டம், பள்ளம், அன்னை நகர் பகுதிகளில் மக்கள் கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர்.

    மீனவர்களின் போராட்டத்தால் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போராட்டம் நடைபெற்ற இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    மீனவர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக மார்த்தாண்டம், புதுக்கடை, குளச்சல், மணவாளக்குறிச்சி, ராஜாக்கமங்கலம், கன்னியாகுமரி போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    குழித்துறை ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டதாக 2 ஆயிரம் பேர் மீதும், குழித்துறை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் செய்ததாக 2 ஆயிரம் பேர் மீதும் என மொத்தம் 4 ஆயிரம் பேர் மீதும் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    தேங்காய்பட்டிணம் சந்திப்பில் மறியலில் ஈடுபட்டதாக 3524 பேர் மீது வழக்கு போடப்பட்டது. மணவாளக்குறிச்சி சந்திப்பில் மறியல் செய்ததாக 702 பேர் மீதும் மணவாளக்குறிச்சி பாலத்தில் மறியல் செய்ததாக 601 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரியில் மறியலில் ஈடுபட்டதாக 2440 பேர் மீதும், ஆர்ப்பாட்டம் செய்ததாக 750 பெண்கள் உள்பட 2440 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குளச்சலில் ஆர்ப்பாட்டம், மறியல் செய்ததாக 48 பேர் மற்றும் பலர் என வழக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 13,815 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியதாக நீரோடி பங்குத்தந்தை லூசியான் மற்றும் பாதிரியார்கள் ஜஸ்டஸ், கென்னடி, டார்வின், செல்வன், சாம்மேத்யூ, அன்பரசு, ஹெர்பிஸ், செல்வராஜ், கிறிஸ்துராஜ், கிறிஸ்டின், பொனிப்பாஸ், கடியப்பட்டணம் பங்குதந்தை கிங்ஸ்லிஜோன்ஸ், பிள்ளைத்தோப்பு பங்குதந்தை அருள்சீலன், அழிக்கால் பங்குதந்தை ரோனால்ஜியூஸ் உள்பட 17 பாதிரியார்கள் மற்றும் குமரி கடலோடிகள் இயக்க செயலாளர் சஜிம்சன், உபஉதயகுமார், திருமுருகன்காந்தி ஆகியோர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே மீனவர்கள் போராட்டத்தில் வன்முறையை தூண்டி சதிச்செயலில் ஈடுபட்டதாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை கே.டி.சி. நகரைச் சேர்ந்த அன்பு, பாளையைச் சேர்ந்த கிங்சன், கோவில்பட்டியைச் சேர்ந்த கணேசன், மாரிமுத்து, ஆதி, கடையநல்லூரைச் சேர்ந்த முகம்மதுஆனஸ், சென்னையைச் சேர்ந்த மருது என்ற ராமு ஆகியோர் நேற்று கொல்லங்கோடு பகுதியில் கைது செய்யப் பட்டனர்.

    அவர்கள் உடனடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×