search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் மத்திய அரசுக்கு சொந்தமான அச்சகம் வருகிற 31-ந்தேதியோடு மூடப்படுகிறது
    X

    கோவையில் மத்திய அரசுக்கு சொந்தமான அச்சகம் வருகிற 31-ந்தேதியோடு மூடப்படுகிறது

    கோவையில் செயல்படும் மத்திய அரசுக்கு சொந்தமான அச்சகம் வருகிற 31-ந்தேதியோடு மூடப்படுவதால் பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பிரஸ்காலனியில் மத்திய அரசின் அச்சகம் செயல்பட்டு வருகிறது. காமராஜர் காலத்தில் தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட இந்த அச்சகம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.

    இந்தியாவில் இது போன்று மொத்தம் 17 அச்சகங்கள் செயல்பட்டு வருகின்றன. 17 அச்சகங்களை இணைத்து 5 அச்சகமாக மாற்றப்படவுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கோவை பிரஸ்காலனியில் மட்டும் செயல்படும் இந்த அச்சகம் லாபத்தில் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்த அச்சகம் மூடுவதற்கு அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அதற்கு ஆதரவாக அனைத்து கட்சியினரும் ஆர்ப்பாட்டம், உண்ணவிரதம், கையெழுத்து இயக்கம், மனித சங்கலி போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக அச்சக ஊழியர்கள் தினமும் மதியம் அச்சகத்தின் கேட் முன்பு, ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

    ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ ஊழியர்களை நேரில் சந்தித்து இந்த பிரச்சனையை பிரதமரின் பார்வைக்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்துச் சென்றார்.

    இந்த நிலையில், அச்சகத்தின் செயல்பாட்டை வருகிற 31-ந்தேதியோடு நிறுத்தி வைக்க மத்திய அரசின் வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் அச்சகத்துறை இயக்குனரகம் குறிப்பாணை வெளியிட்டுள்ளது.

    அதில், ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின் படி, நாடு முழுவதும் உள்ள 17 அச்சகங்களையும் இணைத்து, 5 அச்சகமாக்கும் திட்டத்தின்படி, வருகிற 31-ந்தேதிக்குள் அச்சகத்தில் நிலுவையிலுள்ள அனைத்து பணிகளையும், வேகமாக செய்து முடிக்க வேண்டும்.

    தற்போது பணியில் உள்ள அச்சு எந்திரங்கள், பைண்டிங் மற்றும் பிற துறைகளை சேர்ந்தவர்கள், ஏற்கனவே முடிவு செய்தபடி பிற அச்சகங்களில் பணி அமர்த்தப்படுவர். குமாஸ்தாக்கள், காவலாளிகள் மற்றும் பிற தொழில்நுட்ப அலுவலர்கள், அச்சகத்தில் உள்ள எந்திரங்களை அகற்றுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் பொருட்டு இங்கு சிறிது காலம் பணியில் இருப்பர்.

    பின்னர் அச்சகம் உள்ள இடம், மத்திய அரசின் நிலம் மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் அல்லது மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும். அந்தந்த அச்சகத்தில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்தும், அச்சகத்தில் உள்ள எந்திரங்களை பிரித்து எடுக்க தேவைப்படும் தொழிலாளர்களின் விபரங்கள் குறித்தும், அச்சக மேலாளர்கள் உடனடியாக அறிக்கையாக தெரிவிக்க வேண்டும் என அந்த குறிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து அச்சக ஊழியர்கள் கூறும்போது, இந்த உத்தரவினால் நாங்கள் மேலும் வேதனையடைந்து உள்ளோம். இருந்தாலும் மத்திய அரசு தன் முடிவை கைவிடும் வரை, தொடர்ந்து போராடுவோம் என்று கூறினர்.
    Next Story
    ×