search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிந்து சென்ற சகோதரர்கள் மீண்டும் இணைய வேண்டும்: செல்லூர் ராஜூ பேட்டி
    X

    பிரிந்து சென்ற சகோதரர்கள் மீண்டும் இணைய வேண்டும்: செல்லூர் ராஜூ பேட்டி

    கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்ற சகோதர- சகோதரிகள், விலகி சென்ற நிர்வாகிகள் மீண்டும் கழகத்தில் இணைந்து உற்சாகமாக பணியாற்ற வேண்டும் என்று செல்லூர் ராஜூ கூறினார்.

    மதுரை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

    இந்த தீர்ப்பு குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று கூறியதாவது:-

    தேர்தல் ஆணையத்தின் இந்த தீர்ப்பு கழகத்தில் உள்ள 1½ கோடி தொண்டர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாங்கள் அளவு கடந்த சந்தோசத்தில் இருக்கிறோம்.

    ஏற்கனவே பெரும்பான்மை தொண்டர்கள், நிர்வாகிகள், மக்கள் பிரதி நிதிகள் எங்களிடம் இருந்தனர். இதனால் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும் என்று உறுதியாக நம்பினோம். அந்த நம்பிக்கை வீண்போக வில்லை.

    உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த அங்கீகாரம் தமிழக மக்கள் மத்தியில் எங்களுக்கு மேலும் மரியாதையையும், நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் எங்களுக்கு ஆதரவு பெருகி உள்ளது.

    புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆரின் ஆசி, புரட்சித்தலைவி அம்மாவின் ஆன்மா எப்போதும் எங்கள் பக்கம் இருக்கிறது என்பதற்கு தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பே உதாரணம்.

    முதல்-அமைச்சர் எடப்படி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியையும், ஆட்சியையும் சிறப்பான முறையில் வழி நடத்தி வருகிறார்கள். இது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இனி எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறுவது உறுதி. அமைதி, வளம், வளர்ச்சி என்ற அம்மாவின் லட்சியத்தில் உறுதியுடன் இருந்து மக்கள் பணியாற்றுவோம். நமக்கு அரசியலில் இருக்கின்ற ஒரே எதிரி தி.மு.க.தான்.

    கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்ற சகோதர- சகோதரிகள், விலகி சென்ற நிர்வாகிகள் மீண்டும் உண்மையான கழகத்தில் இணைந்து உற்சாகமாக, உண்மையாக பணியாற்ற வேண்டும்.

    நாம் அனைவரும் அண்ணன், தம்பிகளாக இருந்து அம்மாவின் லட்சிய கனவான இன்னும் 100 ஆண்டுகள் அ.தி.மு.க. தமிழகத்தில் மக்கள் பணியாற்றும் வகையில் அயராது உழைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×