search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரே‌ஷன் அரிசி கடத்திய லாரி.
    X
    ரே‌ஷன் அரிசி கடத்திய லாரி.

    அரக்கோணத்தில் 50 டன் ரே‌ஷன் அரிசி லாரியில் கடத்தல்: அரிசி ஆலை அதிபர் கைது

    அரக்கோணத்தில் 50 டன் ரே‌ஷன் அரிசியை கடத்திய அரிசி ஆலை அதிபர் கைது செய்யப்பட்டார்.
    அரக்கோணம்:

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் அம்மனூரில் இந்திய உணவுப் பொருட்கள் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு வட மாநிலங்களில் இருந்து ரே‌ஷன் அரிசி ரெயில்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்படும்.

    பிறகு, ரே‌ஷன் கடைகளுக்கு லாரிகள் மூலம் 50 கிலோ மூட்டைகளாக பிரித்து அனுப்பப்படும்.இந்த நிலையில், சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வாணிப கிடங்கிற்கு ஒப்பந்த லாரி மூலம் 50 கிலோ மூட்டைகளாக 25 டன் ரே‌ஷன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆனால், அந்த லாரி வாணிப கிடங்கிற்கு செல்லவில்லை. நடுவழியில் 25 டன் அரிசி மூட்டைகளுடன் மாயமானது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு செல்லும் ரே‌ஷன் அரிசிகளில் எடை குறைந்திருப்பதாகவும் தொடர் புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக, வேலூர் மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். இந்த நிலையில், நேற்றிரவு திருவள்ளூருக்கு மீண்டும் 25 டன் எடையுள்ள 500 அரிசி மூட்டைகள் லாரியில் அனுப்பி வைக்கப் பட்டது.

    அந்த லாரியும் அரிசி மூட்டைகளுடன் திடீரென மாயமானது. உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலை அரக்கோணம் அமீர்பேட்டையில் உள்ள திருவேங்கடம் அரிசி ஆலையில் ரே‌ஷன் அரிசி கொண்டுச் சென்ற லாரி நிற்பதை கண்டு பிடித்தனர்.

    விசாரணையில், அந்த ஆலைக்கு ரே‌ஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. ஏற்கனவே, 25 டன் ரே‌ஷன் அரிசியுடன் மாயமான லாரியும் இந்த ஆலைக்கு தான் கடத்தப்பட்டுள்ளது.

    50 கிலோ மூட்டைகளாக இருக்கும் ரே‌ஷன் அரிசியை பிரித்து, பாலிஷ் போட்டு 25 கிலோ மூட்டைகளாக பேக்கிங் செய்துள்ளனர். பிறகு, அந்த அரிசி மூட்டை களின் மேல் அரிசி ஆலையின் பெயரை அச்சிட்டு ஆந்திர மாநிலத்திற்கு கொண்டுச் சென்று அதிக விலைக்கு விற்ற கொள்ளை லாபம் ஈட்டியுள்ளனர்.

    இந்த துணிகர கடத்தலுக்கு லாரி டிரைவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு துணை போனது தெரியவந்தது.

    இதையடுத்து, அரிசி ஆலை அதிபரான திருத்தணியை சேர்ந்த மணி என்கிற தெய்வ சிகாமணியை போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த லாரி டிரைவர் குமரவேலையும் கைது செய்தனர்.

    25 டன் ரே‌ஷன் அரிசியுடன் லாரியையும் பறிமுதல் செய்தனர். 50 டன் ரே‌ஷன் அரிசி கடத்தலில் மட்டுமே ஆலை அதிபருக்கு தொடர்பு உள்ளதா என்றும், அதிகாரிகள் யாருக்காவது தொடர்புள்ளதா? என்றும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.



    Next Story
    ×