search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கந்துவட்டி கேட்டு முன்னாள் அமைச்சர் மிரட்டியதால் தொழில் அதிபர் தற்கொலை: பரபரப்பு தகவல்
    X

    கந்துவட்டி கேட்டு முன்னாள் அமைச்சர் மிரட்டியதால் தொழில் அதிபர் தற்கொலை: பரபரப்பு தகவல்

    கந்து வட்டி கேட்டு ஈரோடு பகுதியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் மிரட்டியதால் தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரவேணு தின்னியூரை சேர்ந்தவர் பெள்ளிராஜ் (80) தொழில் அதிபர். இவருக்கு கோத்தகிரி அரவேணு பகுதியில் ஆங்கில பள்ளி,திருமண மண்டபம் , தியேட்டர், தேயிலை தோட்டம் மற்றும் தொழிற்சாலை என ஏராளமான சொத்துக்கள் இருந்தது.

    கேத்ரீன் நீர் வீழ்ச்சி பகுதியில் காட்டேஜூகளும் இருந்தது. தொழில் அதிபர் பெள்ளிராஜ் தினமும் காலை நடை பயிற்சி செல்வது வழக்கம். நேற்று காலை அவர் நடை பயிற்சி சென்றார்.

    பின்னர் வீட்டுக்கு வந்த அவர் தனது அறைக்கு சென்றார். அங்கு தனது கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பெள்ளிராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உடல் பரிசோதனை முடிந்து நேற்று இரவு 8 மணிக்கு கோத்தகிரி கொண்டு வரப்பட்டது. இன்று உடல் அடக்கம் நடைபெறுகிறது.

    பெள்ளிராஜ் கந்து வட்டி கொடுமையால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. பெள்ளிராஜ் பல்வேறு தொழிலில் ஈடுபட்டு வந்ததால் கடன் ஏற்பட்டுள்ளது. இதனை அடைக்க பலரிடம் வட்டிக்கு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனை அடைக்க தனது ஆங்கிலப்பள்ளி மற்றும் கேத்ரீன் நீர் வீழ்ச்சி பகுதியில் கட்டி இருந்த காட்டேஜூகளை விற்றுள்ளார். தற்போது அவர் திருமண மண்டபம், தேயிலை தொழிற்சாலை மற்றும் தேயிலை தோட்டம் மட்டுமே நடத்தி வந்தார்.

    பள்ளி மற்றும் காட்டேஜூகளை விற்றும் கடனை அடைக்க முடியவில்லை. இந்த நிலையில் கடன் கொடுத்த ஈரோட்டை சேர்ந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஒருவர் ரவுடி கும்பலை அனுப்பி தொழில் அதிபர் பெள்ளிராஜை மிரட்டியாக கூறப்படுகிறது.

    இது குறித்து நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள் போராட்டக் குழு தலைவர் பெள்ளன் கூறியதாவது-

    தொழில் அதிபர் பெள்ளிராஜ் தொழில் தொடர்பாக தான் பெற்ற கடனுக்கு தனக்கு சொந்தமான சொத்தை விற்று கடனை அடைத்துள்ளார்.

    ஈரோடு பகுதியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஒருவர் ரவுடி கும்பலை அனுப்பி கடந்த சில நாட்களுக்கு முன் பெள்ளிராஜை மிரட்டி சென்று உள்ளனர்.

    அதில் இருந்தே மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். இது குறித்து ஆதாரத்துடன் பொதுமக்கள் சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×