search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டை இலை சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணைய உத்தரவின் முக்கிய அம்சங்கள்
    X

    இரட்டை இலை சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணைய உத்தரவின் முக்கிய அம்சங்கள்

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் இணைந்து செப்டம்பர் மாதம் கூட்டிய பொதுக்குழுவில் எந்த விதிமீறலும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    அ.தி.மு.க பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது? என்பது தொடர்பான விசாரணை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நடந்தது. விசாரணையின் முடிவை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

    கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கு ஒதுக்கி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் கட்சியின் பெயர், சின்னத்தை பயன்படுத்த தடை ஏதும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

    83 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு உள்ள பெரும்பான்மையின் அடிப்படையில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு 111 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 42 எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது.

    டி.டி.வி தினகரன் அணிக்கு 20 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 6 எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது. இதனால், மசூதனன் (ஓ.பி.எஸ் அணி மற்றும் அதிமுக அவைத்தலைவர்) தலைமையிலான அணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட அ.தி.மு.க.வாக கருத்தப்படுகிறது.

    கட்சியின் லட்சக்கணக்கான உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்த முடியாது. பொதுக்குழுவையே தொண்டர்களின் பிரதிநிதிகளாக கருத முடியும்.

    பொதுக்குழு உறுப்பினர்கள் என்று பார்க்கும் பட்சத்தில் 2128 பேர் முதல்வர், துணை முதல்வருக்கு ஆதரவாக உள்ளனர். 251 பேர் தினகரன் அணிக்கு ஆதரவாக உள்ளனர்.

    மார்ச் மாதம் கூடிய பொதுக்குழுவில் 1912 உறுப்பினர்கள் சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக இருந்த நிலையில், செப்டம்பர் மாதம் கூடிய பொதுக்குழுவில் உறுப்பினர்களின் நிலைப்பாடு மாறியுள்ளது..

    செப்டம்பர் மாதம் கூடிய பொதுக்குழுவில் எந்த விதிமீறலும் இல்லை. அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும். முதல்வர் அணி மிரட்டி கையெழுத்து வாங்கியுள்ளதக 10 பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த புகார் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    ஜெ.தீபா அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் இல்லை என்பதால அவர் சின்னத்தையோ, கட்சியின் பெயரையோ உரிமை கோர முடியாது. இரு தரப்பிலும் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 325 பிரமாண பத்திரங்கள் போலி என கண்டறியப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×