search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறையில் வெள்ளையன் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது எடுத்த படம்.
    X
    மயிலாடுதுறையில் வெள்ளையன் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது எடுத்த படம்.

    ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது மத்திய அரசின் ஏமாற்று வேலை: வெள்ளையன் குற்றச்சாட்டு

    ஜிஎஸ்டி வரியில் திருத்தம் கொண்டுவருகிறோம். வரியை குறைக்கிறோம் என்று கூறுவது எல்லாம் ஏமாற்று வேலை என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் குற்றம்சாட்டியுள்ளார்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு ஒரே நாடு, ஒரே வரி என்று ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியுள்ளது. அதில் திருத்தம் கொண்டுவருகிறோம். வரியை குறைக்கிறோம் என்று கூறுவது எல்லாம் ஏமாற்று வேலை தான். ஆன்லைன் வணிகத்தை நம்நாட்டில் வளர்ச்சி அடைய செய்தால் உள்நாட்டு வணிகத்தையும, சில்லரை வணிகத்தையும் அழித்துவிடும். அதனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விற்பனை செய்ய சந்தை கிடைக்காது. உற்பத்தி சுதந்திரத்தை விவசாயிகள் இழக்க நேரிடும். நம்நாட்டின் பொருளாதாரம் அன்னியர் கையில் சிக்கி கொள்ளும்.

    ஜிஎஸ்டி வரியை ரத்துசெய்ய வலியுறுத்தி வரும் ஜனவரி 1-ந்தேதி வணிகர்கள் கடைகளில் கருப்புகொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தை நடத்த உள்ளோம். ஜனவரி 30-ந்தேதி காந்தி நினைவு நாளன்று ஜிஎஸ்டிக்கு எதிராக காந்திய கொள்கையை மக்கள் பின்பற்ற வலியுறுத்தி மாநாட்டை நடத்த உள்ளோம். அன்னிய வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளதால் நம்நாட்டில் முன்னேற்றம் அடைந்துள்ளதா? நாடாளும் தலைவர்கள் நம் மக்களை பற்றி சிந்திக்கவில்லை, வெளிநாட்டுக்காரர்களுக்காக ஆட்சி நடத்துகிறார்கள்.

    ஜிஎஸ்டி வரியை இந்தியர்கள் கண்டுபிடித்தார்களா? அமெரிக்கா போன்ற வெளிநாடுகள் கூறுவதை இவர்கள் செயல்படுத்துகிறார்கள். அது எப்படி நமதுநாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும். ஆன்லைன் வர்ததகத்தை முறியடிக்க வேண்டும்.

    நதிநீர் இணைப்பு திட்டம் அவசியம்தான். தமிழ்நாட்டின் நதிநீர் உரிமையை மத்தியில் ஆட்சியாளர்கள் பெற்றுத்தரவில்லை. ஆனால் ஒரே நாடு, ஒரே வரி என்று கூறுகிறார்கள். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் முடமாக்கப்பட்டதால்தான் அன்னியநாட்டின் தனியார் வங்கிகள் அதிக அளவில் தோன்றியதால் கந்துவட்டி, மீட்டர் வட்டி கொடுமைகள் ஏற்படுகிறது. தமிழகத்தில் அரசு தடைசெய்த பொருட்களை விற்பனை செய்ய வணிகர் பேரவை ஊக்குவிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×