search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் மாவட்டத்தில் 300 ரேசன் கடை முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    திண்டுக்கல் மாவட்டத்தில் 300 ரேசன் கடை முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திண்டுக்கல் மாவட்டத்தில் 300 ரேசன் கடைகளில் தி.மு.க.வினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திண்டுக்கல்:

    சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திண்டுக்கல் மாவட்டத்தில் 300 ரேசன் கடைகளில் தி.மு.க.வினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ரேசன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலையை தமிழக அரசு கடந்த 1-ந் தேதி முதல் ரூ.13.50-ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தியது. இதனை கண்டித்து தி.மு.க. சார்பில் அனைத்து ரேசன் கடைகளிலும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இன்று தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் முற்றுகையிட்டு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திண்டுக்கல் நகர் பகுதியில் கிழக்கு ஆரோக்கியமாதா கோவில் தெரு, மேற்கு கோவிந்தாபுரம் முருகன் கோவில் அருகே, ஆர்.வி.நகர் கிரிவல சாலை, மேட்டுப்பட்டி ஆகிய 4 இடங்களில் ரேசன் கடைகளை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சர்க்கரை விலையை குறைக்கக் கோரியும், ரேசன் பொருட்கள் தடையின்றி வினியோகம் செய்ய வலியுறுத்தியும் அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர். இதே போல் பழனி, புது தாராபுரம் ரோடு, கவுண்டம்குளம் ரேசன் கடையில் முன்னாள் நகர மன்ற தலைவர் வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வள்ளியப்பா கார்டனில் நகர செயலாளர் தமிழ்மணி தலைமையிலும், மதினா நகர் பகுதியில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் உமா மகேஸ்வரி தலமையிலும் தி.மு.க.வினர் ரேசன் கடைகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதே போல் ஒட்டன்சத்திரம் தும்மிச்சம்பட்டி புதூரில் சக்கரபாணி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் வெள்ளைச்சாமி, அவைத் தலைவர் மோகன், பொதுக்குழு உறுப்பினர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னிவாடி ரேசன் கடைமுன்பு ரெட்டியார் சத்திரம் ஒன்றிய செயலாளர் சிவகுருசாமி தலைமையில் நகர செயலாளர் சண்முகம், முன்னாள் நகர செயலாளர் இளங்கோவன், பார்த்த சாரதி, பாஸ்கரன், சரவணன், முருகானந்தம் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாறை ரேசன் கடை முன்பு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், ஊராட்சி செயலாளர் சுருளிராஜன் தலைமையில் கீழ்மலை ஒன்றிய பகுதிகளிலும் தி.மு.க. நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, நத்தம், வேடசந்தூர், உள்ளிட்ட 300 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    Next Story
    ×