search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேள்வி கேட்ட விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைப்பதா?: ஈஸ்வரன் கண்டனம்
    X

    கேள்வி கேட்ட விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைப்பதா?: ஈஸ்வரன் கண்டனம்

    கேள்வி கேட்ட விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைக்கும் செயலுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் 2017-2018 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவை துவக்க விழாவும், எரிசாராய ஆலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் துவக்க விழாவும் நடைபெற்றது.

    விழாவில் பங்கேற்ற விவசாயிகள் கடந்த ஆண்டு வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் எரிசாராய ஆலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்ததில் முறைகேடு இருப்பதாகவும் தங்களது நியாயமான பிரச்சனைகளை அமைச்சர்களிடம் எடுத்து சொல்ல முறையிட்டவர்களை போலீசாரை கொண்டு வெளியேற்றியது மட்டுமல்லாமல் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது ஜனநாயக உரிமைகளை நசுக்குவதன் உச்சக் கட்டம்.

    அமைச்சர்கள் தங்களை மக்கள் பிரதிநிதிகளாக நினைக்காமல் அவர்கள் சார்ந்த கட்சியினுடைய நிர்வாகிகளாக அரசு விழாவில் விவசாயிகள் மத்தியில் நடந்து கொள்வது ஏற்புடையதல்ல. விவசாயிகள் கேட்ட நியாயமான கேள்விகளுக்கு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்களில் யாராவது ஒருவர் பதில் கூற முன் வந்திருக்க வேண்டும்.

    ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு கேள்வி கேட்பதற்கு உரிமையில்லையா? அப்படி கேள்வி கேட்பவர்களை போலீசாரின் உதவியுடன் கைது படலத்தை அரங்கேற்றுவது நியாயமா? தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க நேரமிருக்கும் அமைச்சர்களுக்கு விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்க நேரமில்லையா?

    கைது நடவடிக்கைகளின் மூலம் விவசாயிகளை ஒடுக்கி விடலாம் என்று ஆளும் அதிமுக அரசு நினைத்தால் தமிழகம் முழுவதும் ஜனநாயக உரிமைகளுக்காக மாபெரும் புரட்சி வெடிக்கும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×