search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விலையில்லா மடிக்கணினி வழங்க மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பு
    X

    விலையில்லா மடிக்கணினி வழங்க மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பு

    விலையில்லா லேப் டாப்புக்கு ஆசிரியர்கள் கட்டணம் வசூலிப்பதாக மாணவர்கள் கூறிய புகாரையடுத்து முள்ளங்குறிச்சி பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி இன்று விசாரணை நடத்தினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைபள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா லேப் டாப் சமீபத்தில் வழங்கப்பட்டது. இதற்காக மாணவர்களிடம் இருந்து 50ரூபாய் முதல் 250ரூபாய் வரை கட்டணமாக பள்ளி நிர்வாகத்தினர் வசூலித்தனராம்.

    கொடுக்க மறுத்த மாணவர்களுக்கு லேப் டாப் தர மாட்டோம் என்று கூறியதோடு, பள்ளியில் பெரிய அளவில் நிகழ்ச்சியை நடத்தியதற்கான செலவு தொகையை ஈடுகட்ட இந்த பணம் வசூலிக்கப்படுவதாக பள்ளி நிர்வாகத்தினர் கூறியிருந்தனர்.

    இந்த பணத்தை ஆசிரியர் ஒருவர் வசூலிக்கும் போது அவருக்கு தெரியாமல் செல்போனில் அதை வீடியோ எடுத்த மாணவர்களில் சிலர், வாட்ஸ் அப்பில் பதிவு செய்து பல்வேறு குரூப்களுக்கு அனுப்பி வைத்ததால் அது வைரலாகி மற்ற பள்ளி மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து அப்பள்ளி மாணவர்கள் கூறுகையில், கடந்த ஆண்டு இந்த பள்ளியில் படித்த 130 மாணவர்களுக்கு லேப் டாப் வழங்கப்பட்டது. அப்போது ஆசிரியர் ஒருவர், வாகன கட்டணம் மற்றும் நிகழ்ச்சி நடத்தப்பட்ட செலவை ஈடுகட்ட பணம் வசூலிக்கிறோம் என்றார். அப்படியென்றால் அனைத்து மாணவர்களிடமும் ஒரே மாதிரியான கட்டணம்தானே வசூலிக்க வேண்டும். ஏன் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்களிடம் மட்டும் ரூ.250ம், வரலாறு, காமர்ஸ் பிரிவை சேர்ந்த மாணவர்களிடம் 50 ரூபாயும் வசூலிக்கிறீர்கள் என்று கேட்டோம். இதனால் நீண்ட நேரம் காக்க வைத்து லேப்டாப் கொடுத்தனர் என்று கூறினர்.

    இது குறித்து பள்ளி தலைமையாசிரியர் நாகராஜன் கூறும் போது, லேப் டாப் வழங்குவதற்காக பள்ளியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கான செலவினை ஈடுகட்ட அனைத்து மாணவர்களிடமும் 50ரூபாய் வசூலித்து கொள்ளலாம் என்று பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் முடிவு செய்து அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மேலும் கடந்த ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர்களிடம் அரசுக்கு செலுத்த வேண்டிய கல்வி கட்டணம் 200ரூபாயை வசூலிக்க மறந்து விட்டோம். அதை லேப் -டாப் வாங்கும் போது சேர்த்து வசூலித்தோம். அந்த தொகையை அரசு கருவூலத்தில் செலுத்தியுள்ளோம். பள்ளி மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு படித்த மாணவர்களே இது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவது வேதனையை ஏற்படுத்துகிறது என்றார்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி செந்தில்வேல்முருகன் இன்று முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைபள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
    Next Story
    ×