search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை கடற்படை தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள்
    X
    இலங்கை கடற்படை தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள்

    தமிழில் பேசிய புதுக்கோட்டை மீனவர்களை கடுமையாக தாக்கி விரட்டியடித்த இலங்கை கடற்படை

    தமிழில் பேசிய புதுக்கோட்டை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடுமையாக தாக்கி விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று 180 விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த சத்தியராஜ் என்பவருக்கு சொந்தமான படகில், அதேபகுதியை சேர்ந்த அன்பரசன் (வயது 25), நாகரத்தினம் (38), சவுந்தரராஜன் (26), அருள் (19) ஆகிய 4 பேரும் மீன்பிடிக்க சென்றனர்.

    இந்நிலையில் 4 பேரும் நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அந்த வழியாக குட்டி ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கண்டதும் அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தனர்.

    இதையடுத்து அன்பரசன் உள்பட 4 மீனவர்களும் கரையை நோக்கி தங்கள் விசைப்படகினை செலுத்தி கொண்டிருந்தனர். அப்போது வரும் வழியில் விசைப்படகில் என்ஜின் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் நின்றது. உடனடியாக இலங்கை கடற்படையினர் அங்கு வந்து விசைப்படகினை சுற்றி வளைத்தனர். பின்னர் படகில் இருந்த அன்பரசன் உள்பட 4 பேரையும் கட்டை மற்றும் கயிற்றால் பயங்கரமாக தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் அன்பரசன், நாகரத்தினம், சவுந்தரராஜன், அருள் ஆகிய 4 பேரும் காயமடைந்து தங்கள் படகில் கிடந்தனர். இதை அருகில் மற்றொரு விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்த முருகன் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.



    பின்னர் தனது விசைப்படகில் கயிற்றை கட்டி 4 பேர் காயமடைந்து கிடந்த விசைப்படகை இழுத்துக்கொண்டு ஜெகதாப்பட்டினத்திற்கு வந்தார். பின்னர் காயமடைந்த 4 பேரும் 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறியதாவது:-

    ரோந்து கப்பலில் வந்து சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் எங்கள் படகிற்குள் குதித்தனர். அங்கிருந்த அனைத்து பொருட்களையும் தூக்கி கடலில் வீசினர்.

    பின்னர் தங்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்களால் கடுமையாக எங்களை தாக்கினர். அப்போது எங்களில் சிலர் கதறி அழுதனர். அடிப்பதை நிறுத்துங்கள், நாங்கள் திரும்பி சென்று விடுகிறோம் என்று கூறினோம். அதற்கு அவர்கள் தமிழில் பேசினால் தொடர்ந்து அடிப்போம் . அதை தவிர்த்து வேறு மொழியில் பேசுங்கள், உங்களை விட்டு விடுகிறோம் என்று கூறியவாறு மீண்டும் தாக்கினர். அதன்பின்பு எங்களை கரைப்பகுதியை நோக்கி விரட்டியடித்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த சம்பவம் புதுக் கோட்டை மாவட்ட மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×