search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலையுண்ட முருகேசன்- பொன்னியம்மாள்
    X
    கொலையுண்ட முருகேசன்- பொன்னியம்மாள்

    காட்பாடி அருகே மாமனார்- மாமியாரை கொன்ற வாலிபர் நண்பர்களுடன் கைது

    காட்பாடி அருகே அக்காளை கொடுமைப்படுத்தியதால் மாமனார், மாமியாரை கொன்ற தம்பி நண்பர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
    வேலூர்:

    வீட்டுக்கு வீடு வாசல்படி இருப்பது போல மாமியார்- மருமகள் தகராறு இல்லாத வீடுகளை பார்ப்பது அரிது. சிறிய பிரச்சனைகளில் ஆரம்பித்த மாமியார்- மருமகள் தகராறு இரட்டை கொலையில் முடிந்த பயங்கர சம்பவம் காட்பாடி அருகே அரங்கேறி உள்ளது.

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விக்ரமாசிமேடு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 65). ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மனைவி பொன்னியம்மாள் (50). இவர்களுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். மகள்கள் 3 பேருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மகன்கள் ராணுவத்தில் பணியாற்றுகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 9-ந்தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த முருகேசன், பொன்னியம்மாள் இருவரும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் பழைய குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தினர். இதில் எந்த துப்பும் துலங்கவில்லை. இதனையடுத்து முருகேசனின் குடும்பத்தினரை போலீஸ் நிலையம் வரவழைத்து தனித்தனியாக விசாரித்தனர்.

    கைதான 4 பேரையும் படத்தில் காணலாம்.

    இதில் முருகேசனின் மூத்த மகன் கோபியின் மனைவி சோனியா கணவரை பிரிந்து அணைக்கட்டு புலிமேடு கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தது தெரியவந்தது.

    மாமனார்- மாமியார் தகராறு ஏற்பட்டதில் சோனியா கணவரை பிரிந்ததை அறிந்தனர்.

    இதனையடுத்து சோனியாவிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    கோபிக்கும், சோனியாவுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கோபி ராணுவத்தில் பணிபுரிவதால் சோனியா மாமனார், மாமியாருடன் வசித்து வந்தார்.

    அப்போது மாமியார், மருமகள் இடையே தகராறு ஏற்பட்டது. நாளடைவில் இது அதிகரித்து கொண்டே போனது. அதன்பின்னர் மருமகள் சோனியாவை மாமனார் முருகேசன் அடிக்கடி திட்டியும், அவருடைய தாய் வீட்டுக்கு செல்லுமாறும் மிரட்டி வந்துள்ளார். அத்துடன் கோபிக்கு வேறு திருமணம் செய்ய உள்ளதாகவும் மருமகளிடம் தெரிவித்துள்ளார்.

    இதனால் மருமகள் சோனியா மனஉளச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதுகுறித்து தனது தம்பி நவீன்குமாரிடம் கூறி அழுதுள்ளார்.

    தனது அக்காவின் வாழ்க்கை மாமனார் முருகேசனால் வீணாகி விடக்கூடாது. அவர்கள் இருந்தால்தானே கோபிக்கு வேறு திருமணம் நடத்தி வைப்பார்கள் எனவே அவர்களை தீர்த்து கட்ட நவீன்குமார் திட்டம் போட்டார்.

    இதற்காக தனது நண்பர்களான புலிமேடு சதீஷ்குமார், விருதம்பட்டு சக்திவேல், துத்திப்பட்டு முருகன், சாய்நாதபுரம் ராமச்சந்திரன் ஆகியோரை கூட்டு சேர்த்துக் கொண்டார்.

    திட்டமிட்டபடி கடந்த 9-ந்தேதி முருகேசன் வீட்டுக்கு சென்ற நவீன்குமார் உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து முருகேசனை உருட்டு கட்டையால் தாக்கினர்.

    அருகில் இருந்த அவரது மனைவி பொன்னியம்மாளையும் கடுமையாக தாக்கினர். இதில் படுகாயடைந்த இருவரும் அதே இடத்தில் துடி துடித்து இறந்தனர்.

    கொலையை திசை திருப்புவதற்காக வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகையும் கொள்ளையடித்து கொண்டு தலைமறைவாகி விட்டனர்.

    இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் நவீன்குமாரின் நண்பர்கள் 4 பேரும் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நவீன்குமார் காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் நேற்று சரணடைந்தார்.
    Next Story
    ×