search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு பேரம்: ராமதாஸ்
    X

    அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு பேரம்: ராமதாஸ்

    அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு பேரம் நடைபெற்று வருவதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.

    கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழ்நாடு 3 முதல்-அமைச்சர்களையும், 3 ஆளுனர்களையும் பார்த்து விட்ட நிலையில், மிக முக்கியமான அண்ணாபல்கலைக் கழகத்துக்கு மட்டும் துணைவேந்தர் நியமிக்கப்படாதது மிகப் பெரிய அவலமாகும்.

    துணைவேந்தர் இல்லாததால் கடந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு தேவையற்ற சிக்கல்கள் உருவெடுத்தன.

    அடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படவுள்ளது. இத்தகைய தருணங்களில் முக்கிய முடிவுகளை எடுக்க வசதியாக துணைவேந்தர் இருக்க வேண்டியது அவசியமாகும்.

    ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவி ஒன்றரை ஆண்டுகளாக காலியாக இருக்கும் நிலையில், பதிவாளரின் பதவிக் காலமும் முடிவடைந்து விட்டதால் அண்ணா பல்கலைக்கழகம் தலைமையின்றி தடுமாறுகிறது.

    இனிவரும் காலங்களில் துணைவேந்தர்கள் ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்கள் முன்பாகவே புதியத் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால், அண்ணா பல்கலைக்கு இப்போது தேர்வுக்குழுக் கூட இல்லாதது தான் கொடுமையாகும்.

    தேர்வுக்குழுவில் இடம் பெற்றிருந்த உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, கான்பூர் ஐ.ஐ.டியின் முன்னாள் இயக்குனர் அனந்த பத்மநாபன் ஆகியோர் பதவி விலகியதால், இப்போது ஒற்றை உறுப்பினர் மட்டுமே உள்ளார்.

    புதிய உறுப்பினர்கள் நவம்பர் 15-ம் தேதிக்குள் நியமிக்கப்படுவர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தாலும் இன்னும் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை.

    அண்ணா பல்கலைத் துணைவேந்தர் பதவிக்கு மிகப்பெரிய விலை நிர்ணயிக்கப்பட்டு அது தொடர்பாக பேரம் நடை பெற்று வருவதுதான் தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் எம்.ராஜாராம் தாம் மீண்டும் துணைவேந்தராக நியமிக்கப்படவிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் கூறி வருவது இதை உறுதி செய்யும் வகையில் உள்ளது.

    அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் நியமன விவகாரத்தில் இப்போது நடப்பது எதுவுமே நல்லதாகத் தெரியவில்லை. இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், திறமையான, தகுதி வாய்ந்த, நேர்மையான ஒருவரை துணைவேந்தராக தேர்வு செய்யும் வகையில் அப்பழுக்கற்றவர்களைக் கொண்ட புதிய தேர்வுக் குழுவை தமிழக அரசு உடனடியாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×