search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி மேலூரில் கடையடைப்பு - விவசாயிகள் பேரணி
    X

    ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி மேலூரில் கடையடைப்பு - விவசாயிகள் பேரணி

    ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் உடனே தண்ணீர் திறக்க வேண்டும் என்று மேலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
    மேலூர்:

    மதுரை மாவட்ட விவசாய பணிகளுக்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து மதுரை மாவட்டத்தில் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    பெரியாறு பிரதான கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் அதன் கடைமடை பகுதியான மேலூர் பகுதிக்கு வரவில்லை. அழகர்கோவில் அருகே கள்ளந்திரி வரை மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு போக விவசாயம் நடைபெறும் மேலூர் பகுதி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    மேலூர் பகுதிக்கு தண்ணீர் திறக்குமாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர், பொதுப்பணித்துறைக்கு பல்வேறு முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மறியல், போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை.

    இந்த நிலையில் வைகை அணையில் இருந்து தேனி மாவட்ட விவசாயத்திற்காக பி.டி.ஆர்.கால்வாய், தந்தை பெரியார் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் என அரசு அறிவித்தது.

    வழக்கமாக பிரதான கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதியான மேலூர் பகுதிக்கு வந்த பின்பு 20 நாட்களுக்கு பின்புதான் மற்ற கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.

    மேலூர் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்காமல் தற்போது அரசு நீட்டிப்பு கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படும் என அறிவித்துள்ளது. இது மேலூர் பகுதி விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து விவாதிக்க நேற்று மேலூரில் ஒரு போக பாசன விவசாயிகள் சங்க கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மேலூர் பகுதிக்கு உடனே தண்ணீர் திறக்க வேண்டும். நீட்டிப்பு கால்வாய்களுக்கு தண்ணீர் திறப்பதை நிறுத்த வேண்டும்.

    இதனை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மேலூர் வர்த்தக சங்கத்தினர் மற்றும் கீழவளவு, வெள்ளலூர் நாடு, தனியாமங்கலம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி மேலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. மேலூர் பஸ் நிலையம், பஜார், காய்கறி மார்க்கெட் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் நகர் வெறிச்சோடி காணப்பட்டது.

    கோரிக்கைகளை வலியுறுத்தி 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மேலூரில் இருந்து டிராவல்ஸ் பங்களாவில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×