search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் மழை: பாபநாசம் அணை பகுதியில் 88 மில்லிமீட்டர் மழை பதிவு
    X

    நெல்லை மாவட்டத்தில் மழை: பாபநாசம் அணை பகுதியில் 88 மில்லிமீட்டர் மழை பதிவு

    நெல்லை மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் பிரதான பாசன அணையான பாபநாசம் அணையில் மட்டும் 88 மில்லிமீட்டர் மழை கொட்டியது.
    நெல்லை:

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரத்துக்கு முன்னர் பெய்த தொடர் மழையினால் அணைகள், குளங்கள் கிடுகிடுவென உயர்ந்து வந்தன. இந்த நிலையில் கடந்த வாரம் மழை நின்று வெயில் அடிக்க தொடங்கியது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த‌து. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை பெய்தது.

    பிரதான பாசன அணையான பாபநாசம் அணையில் மட்டும் 88 மில்லிமீட்டர் மழை கொட்டியது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதே போல சேர்வலாறு உள்ளிட்ட மற்ற அணைப்பகுதியிலும் மிதமான மழை பெய்தது. பாப‌நாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 97 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 781 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1404 கன அடி தண்ணீர் திறந்து விடப்ப‌ட்டு உள்ளது.

    இதேபோல சேர்வலாறு அணை நீர்மட்டம் 94.22 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 81.95 அடியாகவும், கடனா அணை நீர்மட்டம் 75 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 62.75 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 65.29 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 35.87 அடியாகவும் உள்ளன. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 25.50 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 21.92 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 42.95 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 90.25 அடியாகவும் உள்ளன.

    அணைப்பகுதி தவிர தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி பகுதிகளிலும் நேற்று கன மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் அணைப்பகுதி மற்றும் தாலுகா பகுதிகளில் இன்று காலை வரை பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:

    பாபநாசம் 88, ராமநதி 38, சேர்வலாறு 36, ஆய்க்குடி 34.80, செங்கோட்டை 29, கருப்பாநதி 28, தென்காசி 26.6, குண்டாறு 23, கன்னடியன் 19.6, சிவகிரி 15, ஆலங்குளம் 9.2, சங்கரன்கோவில் 9.1, மணிமுத்தாறு 8, சேரன்மகாதேவி 6, அம்பை 5.4, கடனா 3, அடவிநயினார் 3, நம்பியாறு 2.



    Next Story
    ×