search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழ்வேளூரை அடுத்த நாங்குடி பகுதியில் உள்ள வயல்களில் மழைநீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்
    X
    கீழ்வேளூரை அடுத்த நாங்குடி பகுதியில் உள்ள வயல்களில் மழைநீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்

    ஒருவாரத்துக்கு பின்னர் நாகை மாவட்டத்தில் மீண்டும் கனமழை

    நாகை மாவட்டத்தில் ஒருவாரத்துக்கு பின்னர் நேற்று மீண்டும் பலத்த மழை பெய்தது. வயல்களில் நீரை வடிய வைத்து வரும் நிலையில் மீண்டும் மழை பெய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி நாகை மாவட்டத்தில் ஒருவாரத்துக்கு முன்பு தொடர் மழை பெய்தது.

    அங்கு கனமழை பெய்ததால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. இதில் தண்ணீர் வடியாமல் பல இடங்களில் பயிர்கள் அழுகின.

    இந்நிலையில் மழை பெய்யாததால் வயலில் தேங்கிய மழைநீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர்.

    வேதாரண்யம் பகுதியில் உப்பளங்களில் மழை வெள்ளம் புகுந்ததால் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. சீர்காழி, கொள்ளிடம், தலைஞாயிறு, கீழ்வேளூர், தரங்கம்பாடி, மயிலாடுதுறை, ஆகிய இடங்களில் கன மழையால் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

    தலைஞாயிறு பகுதியில் உள்ள குண்ரோன்வெளி, வண்டல் ஆகிய கிராமங்கள் மழையால் தீவு போலானது. அங்குள்ள மாணவ -மாணவிகள் தினமும் படகுகள் மூலம் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று மீண்டும் பலத்த மழை பெய்தது.

    கொள்ளிடம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், தரங்கம்பாடி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம், கோடியக்கரை உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. இதனால் வயல்வெளிகளை மீண்டும் மழை வெள்ளம் சூழ்ந்தது. மழை நீரை வடிய வைத்து வரும் நிலையில் மீண்டும் மழை பெய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் மழை நீடித்தால் பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும் என்று அச்சமடைந்துள்ளனர். வேதாரண்யத்தில் நேற்று பெய்த மழையால் உப்பு உற்பத்தி மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையால் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. பலத்த மழையால் சாலைகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம், பேரளம், வலங்கைமான் உள்ளிட்ட இடங்களில் நேற்று மழை பெய்தது.

    தஞ்சை மாவட்டத்திலும் மழையால் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பூதலூர் பகுதியில் சில இடங்களில் பாசனத்துக்கு இன்னும தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. அங்கு பம்புசெட் மூலம் விவசாயிகள் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். நேற்று தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், திருவையாறு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. மிதமாக பெய்த மழையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கும்பகோணத்தில் மட்டும் நேற்று பலத்த மழை பெய்தது.
    Next Story
    ×