search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கராசு
    X
    தங்கராசு

    அ.தி.மு.க. பெண் நிர்வாகி வீட்டு முன்பு தீக்குளித்த தி.மு.க. முன்னாள் பிரமுகர் பலி

    பள்ளிபாளையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி செய்தி அ.தி.மு. பெண் நிர்வாகி வீட்டு முன்பு தீக்குளித்த தி.மு.க. முன்னாள் பிரமுகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள பள்ளிபாளையம் ஓடப்பள்ளியை சேர்ந்தவர் தங்கராசு (வயது 55). பஞ்சர் கடை நடத்தி வந்தார். தி.மு.க. முன்னாள் கிளை செயலாளராகவும் இருந்தார்.

    இவரது தம்பி மகன் சித்தார்த் (22). இவர் என்ஜினீயரிங் படித்துள்ளார். அவர் தனக்கு வேலை தேடி வந்தார்.

    அப்போது தங்கராசுவின் பக்கத்து வீட்டை சேர்ந்த கல்யாணி (40) என்ற பெண் சித்தார்த்துக்கு வேலை கிடைக்க உதவுவதாக கூறினார்.

    கல்யாணி நாமக்கல்லில் உள்ள அரசு நூலகத்தில் ஊழியராக பணிபுரிகிறார். அ.தி.மு.க. மகளிர் அணி நிர்வாகியாகவும் உள்ளார்.

    வேலை வாங்குவதற்காக சித்தார்த்திடம் இருந்து தங்கராசு ரூ. 11 லட்சம் பணத்தை வாங்கி கல்யாணியிடம் 3 தவணையாக கொடுத்தார். ஆனால் கல்யாணி வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

    இது பற்றி பலமுறை கேட்டும் கல்யாணியிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. இதனால் தங்கராசு மனம் உடைந்து காணப்பட்டார்.

    இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி கல்யாணியின் வீட்டுக்கு தங்கராசு சென்றார். பணம் தொடர்பாக கல்யாணியிடம் கேட்டார். அப்போதும் கல்யாணி சரியான பதில் சொல்லவில்லை.

    இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற தங்கராசு தான் கொண்டு வந்த மண்எண்ணை கேனை எடுத்து அதில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்தார்.

    அவரது உடல் தீப்பற்றி எரிந்தது. அவர் அலறி துடித்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து தீயை அணைத்து தங்கராசுவை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தங்கராசு இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    தங்கராசுவுக்கு ராணி என்ற மனைவியும், ஆனந்த் (35) என்ற மகனும், கவிதா (38) என்ற மகளும் உள்ளனர். கவிதாவுக்கு திருமணம் ஆகிவிட்டது.

    இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆஸ்பத்திரியில் தங்கராசு சிகிச்சை பெற்றபோது அவரிடம் ஈரோடு 2-வது நடுவர் நீதிமன்ற நீதிபதி வாக்குமூலம் பெற்றார்.

    அவரிடம் தங்கராசு நடந்த சம்பவங்களை 1 மணி நேர வாக்குமூலமாக அளித்துள்ளார். அதன் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் அ.தி. மு.க. நிர்வாகி கல்யாணி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×