search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதாவால் தமிழக உரிமைகள் பறிபோகிறது: மு.க.ஸ்டாலின்
    X

    பா.ஜனதாவால் தமிழக உரிமைகள் பறிபோகிறது: மு.க.ஸ்டாலின்

    பா.ஜனதாவால் தமிழக உரிமைகள் பறிபோகிறது என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    கோவை:

    இந்திராகாந்தி நூற்றாண்டு நிறைவு பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் கோவை சிவானந்தா காலனியில் நடந்தது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் வரவேற்று பேசினார். புறநகர் மாவட்ட தலைவர்கள் வி.எம்.சி. மனோகரன், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இந்திரா காந்திக்கும், கருணாநிதிக்குமான உறவு சுயமரியாதைக்கும், சோசலிசத்துக்குமான உறவை போன்றது. நாம் இந்திரா காந்தியை பல முறை ஆதரித்துள்ளோம். ஆனால் எந்த நேரத்திலும் சுயமரியாதையை இழந்தது இல்லை. இதை இந்திராகாந்தியே பல முறை குறிப்பிட்டுள்ளார். கருணாநிதி என்னை எதிர்த்தாலும் உறுதியுடன் எதிர்ப்பார். ஆதரித்தாலும் உறுதியுடன் ஆதரிப்பார் என பல மேடைகளில் கூறி உள்ளார்.

    ஆனால் இன்று மாநில உரிமைகள் பறிபோகும் அளவுக்கு கோவையில் ஒரு சம்பவம் நடந்ததுள்ளது. அது தான் கவர்னர் ஆய்வு நடத்திய நிகழ்ச்சி. கோவை வந்த கவர்னர் அரசு அதிகாரிகளை அழைத்து வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்து கேள்வி கணைகளை தொடுத்துள்ளார்.

    மாநில சுயாட்சிக்கு இந்திரா காந்தி உறுதுணையாக இருந்ததற்கு எத்தனையோ உதாரணங்களை கூற முடியும். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ஜனவரி 26-ந் தேதி அந்தந்த மாநில கவர்னர்கள் தேசிய கொடியேற்ற வேண்டும் என்றும், ஆகஸ்டு 15-ந் தேதி அந்தந்த மாநில முதல்- அமைச்சர்கள் கொடியேற்ற அனுமதிக்க வேண்டும் என்று கருணாநிதி கடிதம் எழுதினார். அந்த கடிதம் எதிரொலியாக ஆகஸ்டு 15-ந் தேதி முதல்- அமைச்சர்கள் கொடியேற்றும் நடைமுறை அமலுக்கு வந்தது. தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மாநில முதல்- மந்திரிகள் ஆகஸ்டு 15-ந் தேதி அன்று கொடியேற்றும் வாய்ப்பை பெற்றுத்தந்தவர் தலைவர் கலைஞர்.

    ஆனால் இப்போதைய நிலை என்ன? நீட் தேர்வு உள்பட பல்வேறு உரிமைகளை நாம் படிப்படியாக இழந்து வருகிறோம். அதை பற்றி மத்தியில் உள்ள மதவாத ஆட்சியோ, மாநிலத்தில் உள்ள குதிரைபேர ஆட்சியோ சிந்தித்து பார்ப்பது இல்லை.

    அண்மையில் ஏற்பட்ட பருவமழை பாதிப்பு, வர்தா புயல் பாதிப்பு, டெங்கு காய்ச்சல் பாதிப்புகள், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கு நிதி கோரி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஆனால் இதுவரை அதற்கான நிதி வரவில்லை.

    முதல்- அமைச்சர் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதினாலும் நிதியோ, திட்டங்களோ வருவது இல்லை. இதன் மூலம் நாம் மாநிலத்தின் உரிமைகளை இழந்து வருகிறோம்.

    இழந்த உரிமையை மீட்க, நம் இனத்தைகாக்க, இந்த நாட்டை காப்பாற்ற, மத்தியில் மதசார்பற்ற ஆட்சியை அமைப்போம். தமிழகத்தில் ஊழலற்ற, மக்களுக்கு பாடுபடக்கூடிய நேர்மையான ஆட்சியை அமைக்க உறுதி ஏற்போம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

    Next Story
    ×