search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த ஆட்சி தொடரும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
    X

    4 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த ஆட்சி தொடரும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

    அம்மா வழியிலான ஆட்சியை நடத்தும் நாங்கள் பயப்பட மாட்டோம். 4 ஆண்டுகள் மட்டுமல்ல அதற்கு மேலும் இந்த ஆட்சி தொடரும் என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை அரசு மன்னர் துரைசிங்கம் கல்லூரி மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடந்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.

    விழாவில் 15 ஆயிரத்து 689 பயனாளிகளுக்கு ரூ.39 கோடியே 2 லட்சத்து 46 ஆயிரத்து 443 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டம் ஆன்மீகம், வீரம் நிறைந்த மாவட்டம் ஆகும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அரசியலில் போராடி உயர் நிலைக்கு வந்தவர்கள். அம்மா வழியில் இந்த ஆட்சி நடைபெறுகிறது. கட்சியில் 90 சதவீதம் பேர் விசுவாசமானவர்கள்.

    மக்களின் எண்ணப்படி இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியையும் கட்சியையும் ஒற்றுமையுடன் செயல்பட்டு காப்பாற்றி நல்ல பெயர் எடுப்போம். அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆட்சியில் குறை காண முடியாததால் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் ஊழல் நடை பெற்றுள்ளதாக பொய்யான குற்றச்சாட்டுகளை திரும்ப திரும்ப கூறி வருகிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறி வருகிறார்கள்.

    2010 வரை தி.மு.க. ஆட்சியில் 14 ஆயிரத்து 583 கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் பதிவானது. 2011 முதல் 6 ஆண்டுகள் 12 ஆயிரத்து 128 வழக்குகள்தான் பதிவாகி உள்ளன. அனைத்து துறைகளிலும் அம்மாவின் வழியில் சிறப்பாக செயல்படும் அரசை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார்கள். எத்தகைய வே‌ஷம் போட்டாலும் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வர முடியாது.

    இந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதி பூங்காவாக உள்ளது. இவர்களை பார்த்ததும் ஒரு குட்டி கதை நினைவுக்கு வருகிறது.

    ஒரு மரத்தின் மீது சேவல் உட்கார்ந்திருந்தது. அதை பார்த்த நரி அந்த சேவலை சாப்பிட விரும்பியது. நரி அந்த சேவலிடம் நாம் காட்டில் நண்பர்களாகி விட்டோம். கீழே இறங்கி வந்தால் உன்னிடம் விபரமாக கூறுகிறேன் என்று கூறியது.

    இதற்கு சேவல் சற்று தூரத்தில் பார்த்தவாறு இருந்தது. அதற்கு நரி தூரத்தில் என்ன பார்க்கிறாய்? என்று கேட்டது. அதற்கு சேவல் வேட்டை நாய்கள் ஒன்றாக வருகிறது என்று கூறியது. நரி அதற்கு வேட்டை நாய்களுக்கு இதுபற்றி தெரியாது என்று கூறிவிட்டு ஓட்டம் எடுத்தது.

    எனவே நரியின் தந்திரம் சேவலுக்கு புரிந்து விட்டது. அதுபோல் சிலர் நரிகளாக செயல்பட்டு வருகிறார்கள். இதற்கெல்லாம் அம்மா வழியிலான ஆட்சியை நடத்தும் நாங்கள் பயப்பட மாட்டோம். 4 ஆண்டுகள் மட்டுமல்ல அதற்கு மேலும் இந்த ஆட்சி தொடரும்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் புதிய பஸ் நிலையம் கட்டப்படும். காளை யார்கோவில் தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு சுற்றுச்சுவர் அமைக்கப்படும். சிவகங்கை நகரில் உள்ள தெப்பக்குளம் சீரமைக்கப்படும். மன்னர் கல்லூரி, அரசு மகளிர் கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்டிதரப்படும்.

    சிவகங்கையில் ரூ.10 கோடியே 60 லட்சத்தில் புறவழிச்சாலை அமைத்து தரப்படும். பெரம்பலூர் -மானாமதுரை சாலையில் ரூ.4 கோடியே 2 லட்சத்தில் பாலமும், உருவாட்டி, தப்பலூர், முத்தரசன் கோட்டை ஆகிய ஊர்களில் உயர்மட்ட பாலமும், மாத்தூர், முளைகுளம், ஆண்டிச்சி ஊரணியில் சிறு பாலமும் கட்டப்படும்.

    சிவகங்கை அரசு மருத் துவக்கல்லூரிக்கு நவீன உபகரணங்கள், காரைக்குடி அரசு மருத்துவமனை யில் சி.டி. ஸ்கேன், விபத்து சிகிச்சை பிரிவு, நவீன உப கரணங்கள் வழங்கப்படும்.

    கீழசெவல்பட்டி, தெத்தூர், இடையமேலூரில் துணை மின் நிலையம் அமைக்கப்படும். இந்தியா விலேயே தமிழகம் சுகாதாரத்துறையில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இத்தகைய மக்கள் நலத்திட்டங்களை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் செயல்படும் அரசுக்கு உங்களது ஆதர வினை தொடர்ந்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலெக்டர் லதா நன்றி கூறினார். விழாவில் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செந்தில்நாதன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அலுவலருமான முருகானந்தம், காளை யார்கோவில் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, வக்கீல் ராஜா, பாலா, சசிகுமார், அய்யனார், வக்கீல் பாண்டி, சட்டமன்ற அலுவலக மேலாளர் நந்தபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை கலெக்டர் லதா தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, திட்ட இயக்குநர் காஞ்சனா, கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, தாசில்தார் கந்தசாமி மற்றும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×