search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமானவரி சோதனை: சசிகலா-இளவரசியிடம் விரைவில் விசாரணை
    X

    வருமானவரி சோதனை: சசிகலா-இளவரசியிடம் விரைவில் விசாரணை

    பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசியிடம் விசாரணை நடத்த வருமான வரித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா-இளவரசியின் உறவினர்களின் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் என பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினார்கள்.

    இதன் தொடர்ச்சியாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் நேற்று முன்தினம் இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    இது தொடர்பாக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா-இளவரசியிடம் விசாரணை நடத்த வருமான வரித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    இது குறித்து வருமான வரித்துறையினர் கூறுகையில், எங்களின் சோதனையில் சசிகலாவுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து இளவரசியின் மகன் விவேக், அவரது தங்கை ‌ஷகிலா மற்றும் கிருஷ்ணபிரியா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் சில ஆவணங்களில் உள்ள தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. எனவே விடுபட்ட முக்கிய ஆவணங்கள் ஜெயலலிதாவின் வீட்டில் தேடப்பட்டன.

    இந்த சோதனை தொடர்பாக சசிகலா-இளவரசியிடம் விசாரணை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆகவே டெல்லி தலைமை அதிகாரிகள் ஒப்புதல் அளித்த பிறகு பெங்களூரு நீதிமன்றத்தை அணுகி சசிகலா-இளவரசி ஆகியோரிடம் விசாரிக்க அனுமதி பெறப்படும் என்றனர்.

    இது தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் துணை கண்காணிப்பாளர் ரமேஷ்குமாரிடம் கேட்டபோது, சசிகலாவை விசாரிப்பது தொடர்பாக எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. நீதிமன்ற உத்தரவுடன் அணுகினால் விசாரணைக்கு அனுப்புவோம். ஏற்கனவே கர்நாடக மாநில மந்திரியாக இருந்த ஜனார்த்தன ரெட்டி சிறையில் அடைக்கப்பட்ட பின்பு வருமான வரி சோதனை தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார் என்றார்.

    இதற்கிடையே போயஸ் கார்டனில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறித்த தகவலை அறிந்த சசிகலா மனவேதனை அடைந்தார். இரவு முழுவதும் தூங்காமல் தவித்தார். ஜெயிலில் உள்ள இளவரசியிடம் தனது மன குமுறலை தெரிவித்தார்.


    அப்போது அவர், கடந்த முறை சிறைக்குள் ஜெயலலிதா இருந்த போது அவர் யாரிடமும் பேசவில்லை. யாரையும் பார்க்கவில்லை. அதனாலே அவரது உடல் நிலை மோசமாக பாதித்தது. அதே நிலைமையில் தான் இன்று நான் இருக்கிறேன். எனது மனசை தாண்டி கோபங்கள், ஆத்திரங்கள் வருகிறது. அதை என் அனுபவம் தடுக்கிறது. முன்பு போல உடல் ஒத்துழைப்பு தருவதில்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

    மேலும் மனதை கட்டுப்படுத்த யோகா செய்தாலும் நடக்கும் சம்பவங்கள் என்னை அனைத்திலும் முடக்கிப்போட்டுள்ளது. பார்க்கலாம் எதுவரை செல்கிறார்கள். ஒரு போதும் துரோகிகளை நான் மன்னிக்க மாட்டேன். வருமான வரித்துறை சோதனை குறித்து எதிராக யாரும் எதுவும் பேச வேண்டாம். அவர்களது வேலையை அவர்கள் பார்க்கட்டும். அதன் பிறகு நமது வேலையை நாம் செய்யலாம் என்று சசிகலா கூறியதாகவும் தெரிகிறது.

    Next Story
    ×