search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னரின் எல்லை மீறிய செயல்பாட்டுக்கு நீதிமன்ற கதவை தட்டுவதை தவிர வேறு வழியில்லை: நாராயணசாமி
    X

    கவர்னரின் எல்லை மீறிய செயல்பாட்டுக்கு நீதிமன்ற கதவை தட்டுவதை தவிர வேறு வழியில்லை: நாராயணசாமி

    கவர்னரின் எல்லை மீறிய செயல்பாட்டிற்கு நீதிமன்ற கதவை தட்டுவதைத்தவிட வேறு இல்லை என்று நாராயணசாமி பேட்டியில் கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    வில்லியனூர் கோகிலாம்பிகை கோவிலில் அடிப்படை வசதிகள் செய்ய ரூ.4.45 கோடியும், திருக்காஞ்சி கங்காதீஸ்வரர் கோவிலில் அடிப்படை வசதிகள் செய்ய ரூ.5.82 கோடியும் மத்திய அரசு நிதி ஒதுக்கி கொடுத்துள்ளது.

    புதுவை அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல் பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து அமைப்புகளும் தங்களுக்கும் 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளன. இதற்காக குழு அமைக்கப்பட்டு பரி சீலித்து வருகின்றோம்.

    இதற்கிடையில் என்ஜினீயரிங் கல்லூரி, அன்னை தெரசா சுகாதார அறிவியல் நிலையம், ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

    அதாவது 125 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 132 ஆக உயர்ந்துள்ளது. இது நவம்பர் மாத சம்பளத்தில் சேர்த்து வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.10.5 கோடு கூடுதல் செலவு ஏற்படும்.

    தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் கவர்னர் அதிகாரிகளை அழைத்து துறை ரீதியில் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். ஆனால், கவர்னருக்கும், துணை நிலை ஆளுனருக்கும் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை. கவர்னரைவிட துணை நிலை ஆளுனருக்கு கூடுதலாக ஒரே ஒரு அதிகாரம்தான் உள்ளது.

    அதாவது அமைச்சரவை எடுத்து அனுப்பும் கொள்கை முடிவுகளை, கவர்னர் ஏற்க விரும்பவில்லை என்றால் ஜனாதிபதிக்கு அதை அனுப்ப வேண்டும். ஆனால் கவர்னர்கள் அமைச்சரவை எடுத்து அனுப்பும் கொள்கை முடிவுகளில் ஏற்க விரும்பவில்லை என்றால் திரும்பி அமைச்சரவைக்குத்தான் அனுப்ப வேண்டும். மீண்டும் அமைச்சரவை அதையே கொள்கை முடிவாக எடுத்து அனுப்பினால் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

    டெல்லி நாட்டின் தலைமையிடமாக இருப்பதால் சட்டம்-ஒழுங்கு, நிலம், நிதி ஆகியவை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. டெல்லி முதல்வர் அம் மாநில துணை நிலை ஆளுனருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் அரசின் அன்றாட செயல்பாடுகளை நடத்தும் கடமையும், பொறுப்பும் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு உண்டு, அதில் கவர்னர் தலையிடக்கூடாது என கூறியுள்ளது. ஆனால், இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை.

    புதுவை நிர்வாகத்தின் விதிமுறைகளை சுட்டிக் காட்டியும், அரசின் அன்றாட செயல்பாடுகளில் தலையிட அதிகாரம் இல்லை என்று கவர்னருக்கு பல முறை கடிதம் எழுதி உள்ளேன். ஆனால், கேட்காமல் அதிகாரிகளை அழைத்து தன்னிச்சையாக கூட்டம் போட்டு செயல்பட்டு வருகிறார். மாவட்ட கலெக்டர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.

    தமிழக அமைச்சர்கள் கவர்னர் நேரிடையாக தலையிடலாம் என்று கூறி தங்கள் அதிகாரத்தை கவர்னரிடம் வழங்கி சரணாகதி அடைந்துள்ளனர்.

    ஜெயலலிதாவோ, கலைஞரோ முதல்வராக இருந்தால் இதுபோல் கவர்னர் செயல்ட முடியுமா? விடுவார்களா? ஜனாதிபதி மத்திய அரசின் துறை ரீதியான அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி உத்தரவு பிறப்பித்தால் ஏற்பாரா?

    பிரதமருக்கு ஓரு சட்டம், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு ஒரு சட்டமா? பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் அம்மாநில கவர்னர்கள் இதுபோன்று ஆய்வு நடத்துகின்றனரா? நடத்த முடியுமா?

    தமிழக அரசை பா.ஜனதா பினாமியாக வைத்து கொண்டு ஆட்சி செய்ய நினைக்கிறது. அமைச்சரவைக்கான உரிமையை விட்டு கொடுக்க கூடாது என தமிழக அமைச்சர்களை கேட்டுக்கொள்கிறேன். இல்லையென்றால் சரித்திரம் பதில் சொல்லும்.

    மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுதான், மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும். டெல்லியில் இருந்து திணிக்கப்பட்டவர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு நிறைவேற்ற முடியாது.

    ஒவ்வொரு மாநிலத்திலும் 2 ஆட்சி முறையும் இல்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுகளுக்கு யாரும் இடையூறாக இருக்க கூடாது. அவ்வாறு இடையூறு செய்தால் அவர்கள் மக்கள் விரோதிகள். அவர்கள் இன்று இருப்பார்கள், நாளை போய்விடுவார்கள்.

    ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் பிரதிநிதிகள்தான் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். அவரவர் எல்லைக்குள் அவரவர் செயல்பட வேண்டும். உச்சநீதிமன்றம் யாருக்கு, எது அதிகாரம் என்பதை தெரியப்படுத்தும். கவர்னரின் எல்லை மீறிய செயல்பாட்டிற்கு நீதிமன்ற கதவை தட்டுவதைத்தவிட வேறு இல்லை.

    புதுவைக்கு டெல்லியை விட கூடுதல் அதிகாரம் இருப்பதால், டெல்லி அரசு தொடர்ந்துள்ள வழக்கில் புதுவை எப்படி இணைய முடியும்? தனி வழக்கு போட ஆலோசித்து வருகின்றோம்.

    2016-17 மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் கவர்னர் சி.பி.ஐ.க்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் சுகாதாரத்துறை மற்றும் சென்டாக் அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தினர். கைது செய்யாமல் இருக்க அதிகாரிகள் முன்ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தனர்.

    அப்போது சி.பி.ஐ. அரசு ஊழியர்களுடன், நிர்வாகமும் சேர்ந்து கூட்ட சதி செய்திருப்பதாகவும், புதுவை மாணவர்களுக்குரிய இடத்தை தேசிய இட ஒதுக்கீட்டில் கொடுத்து விட்டதாகவும் குற்றம் சாட்டி இருந்தது.

    அரசு மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் சேர்க்கை நடத்தாத கல்லூரிகளின் உரிமத்தை ரத்து செய்துவிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இதை காட்டியவுடன் சதியை நிருபிக்க நீதிமன்றம் கூறியது. இதற்கு சி.பி.ஐ. யால் பதில் அளிக்க முடியவில்லை. புதுவை அரசு ஊழியர்களை பழிவாங்கும் நோக்கில் பொய்யான தகவல்களை சி.பி.ஐ.க்கு கூறி அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த மனுவை விசாரித்த போது நீதிமன்றம் கேட்ட ஆதாரங்களை சி.பி.ஐ.யால் கொடுக்க முடியவில்லை. இதனால் அதிகாரிகளுக்கு முன்ஜாமின் கொடுக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு குற்றவாளி கூண்டில் நிற்க முயற்சிக்கும் நேர்மையான அதிகாரிகளை பாதுகாக்கும் கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு.

    சாதாரண மற்றும் குளிர்சாதன வசதி செய்த ஓட்டல்களிலும் உணவகங்களுக்கு 5 சதவீதம்தான் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. ஆனால், பல ஓட்டல்களில் வரி குறைத்து வசூலிக்கப் படவில்லை என்று புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. மக்கள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில்தான் வரி குறைக்கப்பட்டது.

    எனவே வரி குறைப்பிற்கான பலன் மக்களிடம் சென்றடைய வேண்டும். இல்லையென்றால் வியாபார நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×