search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தைகள் கடத்தலில் நீடிக்கும் மர்மம் - 15 பேரிடம் போலீஸ் தீவிர விசாரணை
    X

    குழந்தைகள் கடத்தலில் நீடிக்கும் மர்மம் - 15 பேரிடம் போலீஸ் தீவிர விசாரணை

    குழந்தைகள் கடத்தலில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 15 பேரை தனிப்படையினர் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை தெப்பக்குளம் பங்கஜம் காலனியை சேர்ந்த தொழிலதிபர் கார்த்திகை செல்வனின் மகள்கள் அனுஸ்ரீ, ஜெயஸ்ரீ ஆகிய இருவரையும் போலீஸ் உடையில் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்று, 50 லட்சம் ரூபாய் பணய தொகை பெற்று கொண்டு விடுவித்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கார்த்திகை செல்வனின் சகோதரர் தங்கராஜிடம் தொலைபேசியில் பேசிய நபர் குறித்து விசாரணை நடத்தியதில், அந்த நம்பரில் இருந்து பேசியவர், நெல்லை மாவட்டம் விக்கிரம சிங்க புரத்தை சேர்ந்த பன்னி கண்ணன் என்பது தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்த தனிப்படையினர் அவரிடம் துருவி துருவி விசாரித்தனர்.

    இதற்கிடையே கார்த்திகை செல்வனின் டிரைவர் பாண்டியனுக்கும், கடத்தல்காரர்களுக்கும் தொடர்பு இருக்குமோ? என்கிற சந்தேகத்தின்பேரில், அவரிடம் ஒருநாள் முழுவதும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை விடுவித்தனர்.

    இந்த நிலையில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில், குழந்தைகளை விட்டு சென்ற ஆட்டோவின் நம்பர் பதிவாகி இருந்தது.

    இதன் அடிப்படையில் போலீசார் ஆட்டோ டிரைவர் பஞ்சாட்சரத்திடம் விசாரித்த போது, ‘மதிச்சியம் வடக்கு தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அந்த 2 குழந்தைகளையும் அழைத்து வந்தேன்’ என்று தெரிவித்தார்.

    போலீசார் அந்த வீட்டுக்கு சென்று அங்கு இருந்த பெயிண்டர் பாண்டி என்பவரின் மனைவி ஜீவலதாவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

    இதனையடுத்து போலீஸ் கமி‌ஷனர் மகேஷ்குமார் அகர்வால் தொழிலதிபர் கார்த்திகை செல்வனுடன் கடத்தப்பட்ட சிறுமி அனுஸ்ரீயை நேரடியாக சம்பவ இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்.

    அப்போது சிறுமி கூறுகையில், ‘நாங்கள் காரில் இருந்து பார்த்தபோது இந்த இடம் பள்ளிக்கூடம் மாதிரி இருந்தது. எனவே கடத்தல்காரர்கள் நம்மை பள்ளிக்கூடத்தில் தான் அடைத்து வைத்து இருப்பார்கள் என்று நினைத்தேன்’ என்று தெரிவித்தார்.

    போலீசார் ஜீவலதாவிடம் விசாரணை நடத்திய போது போது இந்த சம்பவத்தில் முளையாக செயல்பட்டது ரவீந்திரன் என்பது தெரியவந்தது.

    கார்த்திகை செல்வனின் நிறுவனத்தில், ரவீந்திரனின் தந்தை கணக்குப் பிள்ளையாக வேலை பார்த்து உள்ளார்.

    அவர் செப்டம்பர் மாதம் இறந்து போனார். அதன்பிறகு கார்த்திகை செல்வனிடம் சென்ற ரவீந்திரன், ‘உங்களின் நிறுவனத்தில் என் தந்தை நீண்டகாலம் வேலை பார்த்து உள்ளார். எனவே அவருக்கான நிதிப்பலன்களை என்னிடம் தர வேண்டும் என்று கேட்டு உள்ளார்.

    ஆனால் இதற்கு கார்த்திகை செல்வன் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவீந்திரன், குழந்தைகளை கடத்தி கார்த்திகை செல்வனிடம் பணம் பறிப்பது என்கிற முடிவுக்கு வந்தார்.

    மதிச்சயம் வடக்கு தெருவில் வசித்த ஜீவலதாவுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. இதனால் அவரையும் குழந்தைகள் கடத்தலுக்கு உடந்தையாக பயன்படுத்தி கொண்டார்.

    கார்த்திகை செல்வனின் குழந்தைகளை கடத்தல் கும்பல் ஜீவலதாவின் வீட்டில் தான் சுமார் 2 மணி நேரம் அடைத்து வைத்து இருந்தது.

    மதிச்சயம் ஜீவலதாவை கைது செய்த தனிப்படையினர், அவரிடம் ரவீந்திரன் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    அவர் பிடிபட்டால் மட்டுமே ரூ.50 லட்சம் பணய தொகை எங்கு உள்ளது? என்கிற விவரம் தெரிய வரும்.

    இதற்கிடையே கார்த்திகை செல்வனின் உறவினர்கள் யாராவது ரவீந்திரன் கும்பலை பயன்படுத்தி குழந்தைகளை கடத்தி பணய தொகை பெற்று இருப்பார்களோ? என்கிற சந்தேகமும் போலீசாருக்கு உள்ளது.

    எனவே குழந்தைகள் கடத்தலில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 15 பேரை தனிப்படையினர் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×