search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன்.
    X
    கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன்.

    சட்டசபை தேர்தலின்போது கொடநாட்டில் இருந்து பணப்பட்டுவாடா: மேலாளர் நடராஜன் தகவல்

    கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கொடநாடு எஸ்டேட்டில் இருந்து பணப்பட்டுவாடா செய்யப்பட்டதை மேலாளர் நடராஜன் ஒத்துக்கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    கோவை:

    தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் சகிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் வீடு உள்பட 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 நாட்கள் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் கோடிக்கணக்காக பணம் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட் உள்ளது. இதன் அருகில் சசிகலாவுக்கு சொந்தமான கிரீன் டீ எஸ்டேட் இருக்கிறது. கொடநாடு எஸ்டேட்டை மேலாளர் நடராஜன் என்பவர் கவனித்து வருகிறார்.

    கடந்த 9-ந் தேதி கிரீன் டீ எஸ்டேட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கிரீன் டீ எஸ்டேட்டில் இருந்து அதிகாரிகள் ஒரு சூட்கேஸ் மற்றும் 4 பைகளில் ஆவணங்களை கைப்பற்றினர்.

    இந்த சோதனையில் சென்னை, மன்னார்குடி, ஐதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டம் குறித்த ஆவணங்ளும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு காலை முதல் கொடநாடு மற்றும் கிரீன் டீ எஸ்டேட் மேலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இவர்களில் கிரீன் டீ எஸ்டேட் அதிகாரி பழனி குமார் உள்ளிட்ட 20 பேர் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.

    கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை ரேஸ் கோர்ஸ்சில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதன் பின்னர் அவரை நேற்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.

    இதனையடுத்து நேற்று காலை 10.30 மணிக்கு மேலாளர் நடராஜன் ரேஸ்கோர்சில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரை இணை கமி‌ஷனர் தலைமையிலான 5 அதிகாரிகள் தனி அறையில் வைத்து காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையின் போது 60 ஏக்கர் எஸ்டேட் நடராஜன் பெயரில் வாங்கப்பட்டது குறித்தும், தேர்தலின் போது பண பட்டுவாடா நடந்தது குறித்தும், கொடநாடு, கீரின் டீ எஸ்டேட் எந்த முறையில் வாங்கப்பட்டது என்றும் இதனை யார் நிர்வகித்து வருகிறார்கள் என்றும் இதன் கணக்கு தொடர்பான விவரங்களை எந்த வங்கியில் உள்ளது என்றும் கேள்விகள் கேட்டனர்.

    மேலும் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் போது எஸ்டேட் தொழிலாளர்கள் மூலம் எவ்வளவு பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது என்பது உள்பட பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர்.

    விசாரணையில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கொடநாடு எஸ்டேட்டில் இருந்து பணப்பட்டுவாடா செய்யப்பட்டதை ஒத்துக்கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    தேயிலை ஏற்றுமதி தொடர்பாக வெளிநாடுகளில் இருந்து நடராஜன் பெயருக்கு பண பரிமாற்றம் நடந்து குறித்து கேள்விகள் கேட்டனர். முதலில் மறுத்த அவர் பின்னர் தனது பெயரில் நடந்த பண பரிமாற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே போல பண பரிமாற்றம் குறித்த கணக்கு வழக்குகள் சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரனுக்கு தான் தெரியும் என மேலாளர் நடராஜன் அதிகாரிகளிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறி மாலை 6 மணிக்கு அனுப்பி வைத்தனர்.

    வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 9-ந் தேதி முதல் கோவை மணல் வியாபாரி ஆறுமுகசாமி அலுவலகம், வீடுகளில் சோதனை நடத்தினர். சோதனையில் அதிகாரிகள் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர். இதனையடுத்து நேற்று அவரை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினர். நேற்று மாலை 3 மணிக்கு மணல் ஆறுமுகசாமி கோவை ரோஸ்கோர்சில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சொத்துக்கள் வாங்கியது தொடர்பாக 6.30 மணி வரை விசாரணை நடத்தினர்.

    இதே போல மர வியாபாரி சஜீவனின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அங்கும் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இதனையடுத்து அவரிடம் ஓரிருநாளில் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.



    Next Story
    ×