search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளையர்கள் மாடியில் இருந்து துளை போட்டிருக்கும் காட்சி
    X
    கொள்ளையர்கள் மாடியில் இருந்து துளை போட்டிருக்கும் காட்சி

    நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் தங்கம், வெள்ளி - பணம் கொள்ளை

    புழலில் நகைக்கடையின் மாடியில் உள்ள கடை வழியாக துளைபோட்டு பட்டப்பகலில் கொள்ளையர்கள், 3½ கிலோ தங்கம், 4½ கிலோ வெள்ளி மற்றும் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
    செங்குன்றம்:

    சென்னை கொளத்தூர் ஸ்ரீநகர் அனெக்ஸ் 2-வது தெருவைச் சேர்ந்தவர் முகேஷ்குமார் (வயது 37). ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த 15 வருடங்களாக சென்னையை அடுத்த புழல் புதிய லட்சுமிபுரம் கடப்பா சாலை, முத்துமாரியம்மன் கோவில் தெருவில் ‘மகாலட்சுமி தங்க மாளிகை’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    இந்த கடையில் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் விற்பனை செய்வதுடன், நகைகளை அடகு வைத்து பணம் தருவது மற்றும் மாதாந்திர நகை சீட்டும் நடத்தி வந்தார். இவரது உறவினர்கள் உள்பட ஊழியர்கள் என 5-க்கும் மேற்பட்டோர் கடையில் வேலை செய்து வருகின்றனர்.

    தினமும் காலை 9 மணிக்கு கடையை திறந்து வியாபாரம் செய்வார். பின்னர் மதியம் 1 மணிக்கு கடையை பூட்டிவிட்டு சாப்பிட சென்றுவிடுவார்கள். மீண்டும் மாலை 4 மணிக்கு கடை திறக்கப்படுவது வழக்கம்.

    நேற்று மதியம் 1 மணிக்கு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு முகேஷ்குமார் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வீட்டுக்கு சாப்பிட சென்றுவிட்டனர். மாலை 4 மணிக்கு மீண்டும் கடையை திறந்து உள்ளே சென்றனர்.

    அப்போது கடையில் கண்ணாடி அலமாரியில் வைத்து இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மாயமாகி இருந்தது. நகை பெட்டிகள் ஆங்காங்கே சிதறி கடையே அலங்கோலமாக மாறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    நகைக்கடையின் மாடியில் உள்ள கடையில் இருந்து ஒருநபர் உள்ளே புகுந்து வரும் அளவுக்கு துளை போடப்பட்டு இருப்பது தெரிந்தது. மர்மநபர்கள் மாடியில் உள்ள கடையில் இருந்து அந்த துளை வழியாக நகைக்கடைக்குள் புகுந்து 3½ கிலோ தங்கம், 4½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி ராஜமங்கலம் போலீசில் முகேஷ்குமார் புகார் செய்தார். அதன்பேரில் கூடுதல் கமிஷனர் ஜெயராமன், இணை கமிஷனர் அசோக்குமார், அண்ணாநகர் துணை கமிஷனர் சுதாகர், திருமங்கலம் உதவி கமிஷனர் காமில்பாஷா, ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் மாரியப்பன், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொள்ளை நடந்த நகைக்கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    முகேஷ்குமார் வாடகை கட்டிடத்தில்தான் அந்த நகைக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையின் உரிமையாளரான பாண்டுரங்கன், கடையின் பின்புறம் வசித்து வருகிறார். அவரிடம் போலீசார் விசாரித்தனர்.

    முகேஷ்குமாரின் நகைக்கடைக்கு மேலே பாண்டுரங்கனுக்கு சொந்தமான மற்றொரு கடை உள்ளது. அந்த கடை வாடகைக்கு விடப்படும் என தெரிவித்து இருந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராஜேஷ் என்பவர் தனது நண்பருடன் வந்து, அலுவலகம் நடத்தப்போவதாக கூறி அந்த கடையை பாண்டுரங்கனிடம் வாடகைக்கு பேசி எடுத்து இருந்தார்.

    தினமும் ராஜேசும், அவரது நண்பரும் பகல் முழுவதும் கடையை திறந்து வைத்து இருப்பதும், இரவு கடையை பூட்டிவிட்டு சென்று விடுவதுமாக இருந்தனர். அவர்கள், முகேஷ்குமார் நகைக்கடையில் கொள்ளையடிக்கும் திட்டத்துடனேயே அந்த கடையை வாடகைக்கு எடுத்து இருப்பது தெரிந்தது.

        நகைக்கடை உரிமையாளர் முகேஷ்குமார்

    முகேஷ்குமார் நகைக்கடை மதியம் 1 மணியில் இருந்து 4 மணிவரை பூட்டி இருப்பதை நோட்டமிட்ட அவர்கள், அந்த நேரத்தில் கொள்ளை அடிக்க முடிவு செய்து உள்ளனர். இதற்காக கடந்த 10 நாட்களாக, நகை கடை பூட்டி இருக்கும் நேரத்தில் தாங்கள் வாடகைக்கு எடுத்து இருந்த மாடியில் உள்ள கடையின் ஒரு பகுதியில் இருந்து கீழ்தளத்தில் உள்ள நகைக்கடைக்கு ஒரு ஆள் நுழையும் அளவுக்கு சிறிது சிறிதாக துளைபோட்டு வந்து உள்ளனர்.

    இறுதியில் நேற்று மதியம் முகேஷ்குமார் மற்றும் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சாப்பிட சென்றதும், தங்கள் கொள்ளை திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர். மாடியில் உள்ள கடையில் இருந்து போடப்பட்ட துளை வழியாக நகைக்கடைக்குள் இறங்கி அங்கிருந்த தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு அதன் வழியாக மாடியில் உள்ள கடைக்கு சென்று உள்ளனர்.

    பின்னர் கடையை பூட்டிவிட்டு கொள்ளையடித்த நகை, வெள்ளி, பணத்துடன் தப்பிச்சென்று விட்டனர். நகைக்கடையின் வெளிப்புற பூட்டு உடைக்கப்படாததால் இது யாருக்கும் தெரியவில்லை. பட்டப்பகலிலேயே தங்கள் கொள்ளை திட்டத்தை நிறைவேற்றி விட்டு தப்பி விட்டனர்.


    கொள்ளை சம்பவம் நடந்த நகைக்கடையை படத்தில் காணலாம்.

    கடையை வாடகைக்கு எடுத்த ராஜேஷ் மற்றும் அவருடைய நண்பர் இருவரும் பார்ப்பதற்கு வடமாநில வாலிபர்கள் போல் தோற்றம் அளித்ததாக கடையின் உரிமையாளர் பாண்டுரங்கன் போலீசாரிடம் தெரிவித்தார்.

    எனவே அவர்கள் நகைக்கடையில் கொள்ளையடித்த நகை, வெள்ளி, பணத்துடன் வடமாநிலத்துக்கு தப்பிச்செல்லாமல் தடுக்கும் வகையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். போலீசார் 3 தனிப்படைகளாக பிரிந்து சென்னை சென்டிரல் ரெயில் நிலையம், சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு விரைந்து சென்று 2 பேரையும் பிடிக்க தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×