search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயிரை மீனுக்கு விரைவில் ‘தமிழக மீன்’ ஆக அங்கீகாரம்: மீன்வள பல்கலைக்கழகம் ஏற்பாடு
    X

    அயிரை மீனுக்கு விரைவில் ‘தமிழக மீன்’ ஆக அங்கீகாரம்: மீன்வள பல்கலைக்கழகம் ஏற்பாடு

    தமிழ்நாட்டை பொறுத்த வரை அயிரை மீனை மாநில மீனாக அங்கீகரிப்பதற்கான ஏற்பாடுகளில் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது.
    சென்னை:

    ஒவ்வொரு மாநிலமும் தங்களது அதிகாரப்பூர்வ மீன்களை அடையாளம் காணுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

    கேரளா ‘கறி மீனையும்’, தெலுங்கானா முரல மீனையும், மாநில மீன்களாக ஏற்கனவே அங்கீகரித்து விட்டன.

    தமிழ்நாட்டை பொறுத்த வரை அயிரை மீனை மாநில மீனாக அங்கீகரிப்பதற்கான ஏற்பாடுகளில் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது.

    இந்த மீனை சுவை அறிந்து சொல்லும் வல்லுனர் அயிரை மீன் குறித்து மிகவும் திருப்தி தெரிவித்துள்ளார். இதனால் அயிரை மீனை விரைவில் தமிழக மீனாக அங்கீகாரம் செய்யப்படுகிறது.

    அயிரை மீன் என்பது குளம், வாய்க்கால் மற்றும் சேறுகள் நிறைந்த சிறு ஆறுகள் போன்றவற்றில் வளரும் மீன் வகையாகும். இந்த மீன்கள் உருவத்தில் மிக சிறிய அளவில் இருக்கும்.

    உணவுக்கு பயன்படுத்தும் போது இந்த மீனின் எந்த பகுதியும் நீக்கப்படுவது இல்லை. சேற்று பகுதியில் இருப்பதால் இதன் உடலில் இருக்கும் மேல் தோல் சிறிது நிறமாறும்படி உப்பு கொண்டு ஏதாவது ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சிலமுறை சுத்தம் செய்யப்படும்.

    இந்த மீன் மருத்துவ குணமுடையதாக இருப்பதால் இதை வாங்கி சாப்பிடுவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதனால் விலையும் மற்ற ஆற்று மீன்களை விட அதிகமாக உள்ளது.

    அயிரை மீன்கள் ஒரு கிலோ ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அசைவ உணவகங்களில் இந்த வகை மீன் குழம்பு கிடைக்கிறது.

    தமிழ்நாட்டில் அயிரை மீன் வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் மாதவரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் பராக்காய் ஆகிய இடங்களில் அமைக்க மீன்வள பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

    மாதவரத்தில் இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன.
    Next Story
    ×