search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை கோவில் கருவறையில் 5 இடங்களில் அஷ்டபந்தனம் சீரமைப்பு
    X

    திருவண்ணாமலை கோவில் கருவறையில் 5 இடங்களில் அஷ்டபந்தனம் சீரமைப்பு

    திருவண்ணாமலை கோவில் கருவறையில் 5 இடங்களில் மீண்டும் சாத்தப்பட்டுள்ள அஷ்டபந்தன மருந்து காய்வதற்காக 2 நாட்களுக்கு மூலவருக்கு பால் மற்றும் பொருட்களால் செய்யப்படும் அபிஷேகம் நிறுத்தப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோவிலில் உள்ள அனைத்து சன்னதியிலும், சாமி சிலைகளை சுற்றி அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது.

    இந்த மருந்து சாத்தப்படும்போது மூலவர் சிலையை சுற்றி தங்கம், வைர நகைகள் மற்றும் முத்து, பவளம் போன்ற விலை உயர்ந்த கற்கள் வைப்பது வழக்கம். அவற்றின் மீது அஷ்டபந்தன மருந்தை வைத்து அழுத்தம் கொடுத்து சாற்றப்படும்.

    அவ்வாறு சாற்றப்படுவதால் மூலவர் சிலை ஆடாமல், அசையாமல் இருப்பதுடன் சாமியின் சக்தியும் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

    இந்த நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற ஓரிரு மாதங்களில் மூலவர் அருணாசலேஸ்வரருக்கு சாற்றப்பட்ட அஷ்டபந்தன மருந்து பெயர்ந்தது.

    தலைமை ஸ்தபதி முத்தையன், கோவிலுக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சென்னையில் இருந்து கூடுதல் ஆணையர்கள் திருமகள் மற்றும் சுதர்சன் ஆகியோர் கோவிலுக்கு வந்து கோவில் அலுவலர்கள் மற்றும் குருக்களிடம் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று கோவிலுக்கு தலைமை ஸ்தபதி முத்தையன், பொக்கி‌ஷ நகை மதிப்பீட்டாளர்கள் விஜயன், குமார் ஆகியோரும் வந்தனர். அவர்கள் கோவில் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

    இதையடுத்து பகல் 12.30 மணியளவில் கோவில் நடைசாத்தப்பட்ட பிறகு தலைமை ஸ்தபதி முத்தையன், பொக்கி‌ஷ நகை மதிப்பீட்டாளர்கள் விஜயன், குமார், கோவில் இணை ஆணையர் ஜெகன்னாதன், குருக்கள்கள் கீர்த்தி ரமேஷ், கீர்த்தி வாசன், மணியக்காரர் செந்தில் ஆகியோர் மூலவர் சன்னதியில் பிரம்ம பாகத்தில் விலகி இருந்த அஷ்டபந்தன மருந்தை விலக்கி நகைகளை எடுத்து மறுஆய்வு செய்தனர். பின்னர் மீண்டும் அஷ்டபந்தன மருந்து பெயர்ந்து உள்ள இடத்தில் அஷ்டபந்தனம் சாற்றப்பட்டது. 5 இடங்களில் பெயர்ந் திருந்த அஷ்டபந்தனத்தை சீரமைத்தனர்.

    அஷ்டபந்தனம் காய்வதற்காக 2 நாட்களுக்கு மூலவருக்கு பால் மற்றும் பொருட்களால் செய்யப்படும் அபிஷேகம் நிறுத்தப்பட்டு மலர்களால் அபிஷேகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்ட பிறகு அருணாசலேஸ்வரர் சன்னதியில் இருந்து அவர்கள் வெளியே வந்தனர். அப்போது பொக்கி‌ஷ நகை மதிப்பீட்டாளர் விஜயன் கூறுகையில்:-

    ‘‘மூலவர் சன்னதியில் அஷ்டபந்தன மருந்து விரிசல் ஏற்பட்டு உள்ள இடத்தில் இருந்த நகைகள் சரிபார்க்கப்பட்டது. பொக்கி‌ஷ பெட்டகத்தை தற்போது நான் பார்க்கவில்லை.

    அஷ்டபந்தன மருந்து பெயர்ந்து உள்ள இடத்தில் வைக்கப்பட்ட நகைகளை மட்டுமே சரி பார்த்து உள்ளேன். விரிசல் விட்ட இடத்தில் அஷ்டபந்தன மருந்து மீண்டும் பூசப்பட்டு உள்ளது’’ என்றார்.

    தலைமை ஸ்தபதி முத்தையன் கூறுகையில்:-

    பிரம்ம பாகத்தில் உள்ள தரையில் 5 இடங்களில் அஷ்டபந்தன மருந்து பெயர்ந்து இருந்தது. மூலவருக்கு அதிகளவில் அபிஷேகம் செய்ததால், தரையில் தண்ணீர் தேங்கி அஷ்டபந்தனம் பெயர்ந்து இருக்கலாம். அஷ்டபந்தன மருந்து பெயர்ந்து உள்ள இடங்களில் மீண்டும் மருந்து சாத்தப்பட்டு உள்ளது. இது நிரந்தரமானது’’ என்றார்.

    அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஜெகன்னாதன் கூறுகையில், ‘‘மதியம் 1 மணிக்கு மேல் பழைய மருந்து எடுக்கப்பட்டு புதிய மருந்து சாத்தப்பட்டு உள்ளது. மாலையில் பரிகார பூஜை செய்யப்பட்டது.

    அஷ்டபந்தன மருந்து பெயர்ந்த இடத்தில் இருந்த நகைகள் குறித்து பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

    முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் மீண்டும் அஷ்டபந்தன மருந்து சாத்தப்படும் என்று தெரிவித்த கோவில் நிர்வாகம் அவசரம், அவசரமாக யாருக்கும் தெரியாமல் மீண்டும் அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது பல்வேறு தரப்பினரிடையே மேலும் சந்தேகத்தை வலுக்கச் செய்துள்ளது.

    Next Story
    ×