search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில உரிமைக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளோம்: நாராயணசாமி தகவல்
    X

    மாநில உரிமைக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளோம்: நாராயணசாமி தகவல்

    மாநில உரிமைக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த பாரத பிரதமர் நேருவின் 128-வது பிறந்தநாள் விழா கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

    மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்- அமைச்சர் நாராயணசாமி நேரு உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    மோதிலால் நேருவின் மகனான ஜவகர்லால்நேரு மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். சுதந்திர போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தார். அவர் ஆயிரத்து 340 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். நேருவின் மீது தேச தந்தை காந்திக்கு ஈர்ப்பு இருந்தது.

    இந்தியாவை நவீன வல்லரசாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வந்தவர் நேரு. ஆனால் தற்போதைய பா.ஜனதா அரசு பல்வேறு வகையில் மக்களை துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளது. நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. வேலையின்மை அதிகரித்துள்ளது. சரக்கு சேவை வரியால் அனைத்து மாநிலத்திலும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த வருவாய் இழப்பை ஈடுசெய்வதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் ஈடு செய்யும் காலம் வரை மக்கள் நல திட்டங்களை எப்படி நிறைவேற்ற முடியும்? எதிர் கட்சிகளை பழிவாங்கும் நோக்கோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஆளும் கட்சியை சேர்ந்த மாநிலங்களுக்கு கேட்டவுடன் நிதி தரப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சி மாநிலங்கள் எத்தனை முறை கேட்டாலும் நிதி அளிப்பதில்லை.

    வறட்சி நிவாரணம் கேட்டும் கிடைக்கவில்லை. இது வரை 20 முறை நிதி மந்திரியை சந்தித்துள்ளேன். திட்டமில்லா செலவுக்கு 27 சதவீதம் நிதி மட்டுமே தரப்படுகிறது. ஆனால் ரூ.527 கோடியாக இருந்த திட்டமில்லா செலவு தற்போது ரூ.2 ஆயிரத்து 850 கோடியாக உயர்ந்துள்ளது.

    இதை எப்படி ஈடுகட்ட முடியும்? மாநிலங்களுக்கு 42 சதவீதம் நிதி வழங்கப்படுகிறது. ஆனால் யூனியன் பிரதேசத்திற்கு 27 சதவீதம் தான் நிதி தருகின்றனர். காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது. நேரடியாக எதிர்க்கட்சி மாநிலங்களில் தலையிடாமல் கொல்லைப்புறமாக நியமிக்கப்பட்ட அதிகார வர்க்கத்தின் மூலமாக மாநில அரசுக்கு தொல்லை கொடுக்கின்றனர்.

    எதிர்த்து பேசும் எதிர்க் கட்சியினருக்கு சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத் துறையை ஏவி விடுகின்றனர். இந்த சல சலப்புக்கு காங்கிரஸ் கட்சி அஞ்சாது. குறுகிய காலத்தில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது நமக்கு விடிவுகாலம் பிறக்கும். ஒரு துறையில் பணியாற்றுபவர்கள் மற்ற துறையில் பணியாற்றக்கூடாது என கவர்னர் கூறியுள்ளார்.

    கவர்னர் மாளிகையில் 64 பேர் மாற்று துறையை சேர்ந்தவர்கள் தான் பணியாற்றுகின்றனர். தன்னிடம் குறையை வைத்துக்கொண்டு கவர்னர் பிறரை குற்றம் சாட்டி வருகிறார். டெல்லி முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம், மாநில அரசின் அன்றாட பணிகளில் கவர்னர் தலையிடக்கூடாது. மாநில அரசின் பணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது.

    இதை பார்த்தாவது சிலருக்கு புத்தி வர வேண்டும். இதற்கு சரித்திரம் பதில் சொல்லும். பிரதமர், மத்திய மந்திரி, நிர்வாகி என தற்போது நீதிமன்றத்தின் கதவை தட்டியுள்ளோம். இதில் நமக்கு கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர்கள் ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, கமலகண்ணன், துணை சபாநாயகர் சிவகொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் ஜெய மூர்த்தி, தீப்பாய்ந்தான், முன்னாள் முதல்-அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் வல்சராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. நீல கங்காதரன், காங்கிரஸ் துணை தலைவர்கள் விநா யகமூர்த்தி, தேவதாஸ், பொதுச் செயலாளர்கள் ஆறுமுகம், தனுசு, இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா, துணைத் தலைவர் சரவணன், சேவா தள தலைவர் சிபி, ராகுல் காந்தி பேரவை ஆர்.இ. சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×