search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ரூ. 7 கோடி செலவில் சர்க்கரை நோய்க்கு தனி பிரிவு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
    X

    ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ரூ. 7 கோடி செலவில் சர்க்கரை நோய்க்கு தனி பிரிவு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

    ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரூ. 7 கோடி மதிப்பில் 3 மாடிகள் கொண்ட சர்க்கரை நோய்க்கான தனித்துறை அமைக்கப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி சென்னை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மரக்கன்றுகளை நட்டு வைத்து நீரிழிவு நோய் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மேலும் 25 ஆண்டுகளுக்கு மேலாக முதலாம் வகை சர்க்கரை நோய் இருந்தும் சரியான தொடர் சிகிச்சை மூலம் நலமுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் 15 பேருக்கு குளுக்கோ மீட்டர் அடங்கிய பரிசு பெட்டகத்தை அவர் வழங்கினார்.

    விழாவில் பின்னர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    உலகளவில் 41.5 கோடி நபர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2040-ம் ஆண்டு 64.2 கோடியாக உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் சுமார் 6.9 கோடி சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். இது 2040-ம் ஆண்டு 10.9 கோடியாக உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் 7.5 கோடி மக்கள் உள்ளனர். இதில் 10.4 சதவீதம் அதாவது 70 லட்சம் பேர் சர்க்கரை நோயாளிகள் தமிழகத்தில் உள்ளனர்.

    இந்தியாவிலேயே முதன் முதலாக நீரிழிவு நோய்த்துறை சென்னை மருத்துவ கல்லூரியில் 1979-ம் ஆண்டு 30 படுக்கை வசதிகளுடன் தொடங்கப்பட்டது.

    இத்துறையில் தினமும் 800 வெளிநோயாளிகள் பயன் பெறுகின்றனர். 30 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தியாவிலேயே தமிழக அரசு மட்டும்தான் முதலாம் வகை சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்கள் நலன் கருதி வீட்டிலேயே “இன்சுலின்” ஊசி போட்டுக் கொள்ள வசதியாக முழு இன்சுலின் பாட்டில்கள் கட்டணமில்லாமல் வழங்குகிறது. இதன் மூலம் மாதம் தோறும் 1400 பேர் பயன் பெற்று வருகின்றனர்.

    அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ. 7 கோடி மதிப்பில் 3 மாடிகள் கொண்ட சர்க்கரை நோய்க்கான தனித்துறை அமைக்கப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது.

    தமிழக அரசின் தொற்றா நோய்கள் கண்டறியும் திட்டத்தில் ஜூலை 2012 முதல் செப்டம்பர் 2017 வரையிலான காலத்தில் 3 கோடியே 83 லட்சத்து 96 ஆயிரத்து 95 பேருக்கு நீரிழிவு நோய் பரிசோதனை செய்யப்பட்டதில் 16 லட்சத்து 44 ஆயிரத்து 577 பேருக்கு நீரிழிவு நோய் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ, முன்னாள் துணை வேந்தர் சாந்தாராம், டீன் நாராயணபாபு, கண்காணிப்பாளர் நாராயணசாமி, நீரிழிவு துறை இயக்குனர் தர்மராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×