search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா, சசிகலாவின் அறையை சோதனையிட காத்திருக்கும் அதிகாரிகள்
    X

    கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா, சசிகலாவின் அறையை சோதனையிட காத்திருக்கும் அதிகாரிகள்

    கொடநாடு எஸ்டேட் பங்களாவில் உள்ள ஜெயலலிதா, சசிகலாவின் நவீன அறைகளில் சோதனை நடத்துவதற்கு உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.
    கோவை:

    சசிகலா குடும்பத்தினரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 9-ந் தேதி முதல் 5 நாட்கள் அதிரடி சோதனை நடத்தினர்.

    தமிழகம் மட்டுமல்லாது பெங்களூர், புதுச்சேரி உள்பட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனையில் கொடநாடு பங்களாவும் தப்பவில்லை.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக 1600 ஏக்கரில் உள்ள பிரமாண்ட எஸ்டேட்டில் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர்.

    இவர்கள் மூலமாக சசிகலா குடும்பத்தினர் கருப்பு பணத்தை மாற்றினார்களா? சொத்து ஆவணங்கள் இங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் பங்களா மேலாளர் நடராஜன் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் ஏராளமான தகவல்கள் கிடைத்தன. இதுதொடர்பாக எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் இன்று 6-வது நாளாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பங்களா ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டாலும் அங்குள்ள ஜெயலலிதா, சசிகலா ஆகியோரது அறைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்னும் சோதனை நடத்தவில்லை என கூறப்படுகிறது.

    லேசர் ஸ்கேனிங் உள்பட நவீனவசதிகள் நிறைந்த இந்த அறைகளில் சோதனை நடத்துவதற்கு சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளனர். அவர்களின் அனுமதி கிடைத்த பிறகே அதிநவீன கருவிகள் உதவியுடன் ஜெயலலிதா, சசிகலா அறைகளில் சோதனையிட வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கொடநாடு பங்களாவில் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் அனைத்தும் அருகே உள்ள சசிகலாவுக்கு சொந்தமான கர்சன் டீ எஸ்டேட்டுக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதையடுத்து கர்சன் எஸ்டேட்டில் தான் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    கொடநாடு எஸ்டேட் பங்களா சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தினர். இதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. இது தொடர்பாக கர்சன் எஸ்டேட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், கொடநாடு பங்களாவில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஜெயலலிதா, சசிகலா அறைகளில் சோதனை நடத்துவதற்கு உயரதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். உயரதிகாரிகளின் அறிவுரைப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
    Next Story
    ×