search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழில் பிழை: 50 மார்க் 5 ஆக மாறியதால் மாணவி தற்கொலைக்கு முயற்சி
    X

    பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழில் பிழை: 50 மார்க் 5 ஆக மாறியதால் மாணவி தற்கொலைக்கு முயற்சி

    பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழில் ஏற்பட்டுள்ள பிழையால் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து நஷ்டஈடு வழங்க பள்ளிக்கல்வித்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
    சென்னை:

    சென்னையை சேர்ந்த அரபிக் ஆசிரியர் ஜமீல் பாஷா. இவரது மகள் கோபாலபுரத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 2012-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதினார்.

    இந்த மாணவி அந்த பள்ளியில் நன்றாக படிக்க கூடியவர். டாக்டராக வேண்டும் என்ற நோக்கத்தில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற முயற்சியில் கடுமையாக ஈடுபட்டார். தேர்வு முடிவு வெளியானது.

    அதில் தன்னுடைய மதிப்பெண்ணை சான்றிதழை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பள்ளி நடத்தும் செய்முறை தேர்வில் மாணவி தோல்வி அடைந்து இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மாணவி அந்த பாடத்தில் செய்முறை தேர்வில் 5 மதிப்பெண் மட்டும் பெற்று இருப்பதாக தேர்வு முடிவில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர் பள்ளியில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அவரது செய்முறை தேர்வு மதிப்பெண் இடம் பெற்று இருந்த ஆவணத்தையும் பரிசோதிக்க அறிவுறுத்தினார். அதில் அந்த மாணவி 50 மதிப்பெண் பெற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    எந்த பள்ளியிலும் செய்முறை தேர்வில் இவ்வளவு குறைவான மதிப்பெண் வழங்கப்படுவது இல்லை. 50 மதிப்பெண் என்பதற்கு பதிலாக 5 என பிழையாக முடிவு அறிவிக்கப்பட்டது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் மாணவி முறையிட்டார்.

    அதனை தொடர்ந்து பள்ளி சார்பில் தேர்வுத் துறையிடம் மதிப்பெண் பட்டியலில் பிழையை திருத்தம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. செய்முறை தேர்வில் மாணவி 50 மதிப்பெண் பெற்று இருப்பதாக எடுத்து கூறியும் அதனை பொருட்படுத்தவில்லை.

    இதற்கிடையில் மதிப்பெண் பட்டியல் வினியோகிக்கப்பட்டது. அதில் மாணவியின் மதிப்பெண் பிழை திருத்தம் செய்யப்படாமல் ‘5 மார்க்‘ என தவறாக அச்சிடப்பட்டு இருந்தது. இதைப்பார்த்த மாணவி மிகுந்த மனவேதனையும், மன அழுத்தமும் ஏற்பட்டது.

    விரக்தியில் தற்கொலை முயற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளார். அவரை பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் மாணவியின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

    பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழில் ஏற்பட்டுள்ள பிழை மகளின் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டதாக பெற்றோர் கருதினர். உயர் கல்வியை பெற முடியாத நிலை ஏற்பட்டது.

    மாணவியுடன் பிறந்த மற்றவர்கள் உயர் கல்வியில் சேர்ந்து விட்டனர். ஆனால் மகளின் படிப்பு வீணாகி விட்டதே என்று வருத்தம் அடைந்த ஜமீல்பாஷா சென்னை தெற்கு நுகர்வோர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    தனது மகளுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு பள்ளிக் கல்வித்துறை நஷ்டஈடு தரவேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம் மாணவியின் மன அழுத்தத்திற்கு ரூ.25 ஆயிரம் மற்றும் நிவாரணமாக ரூ.5 ஆயிரத்தை பள்ளிக் கல்வித்துறையும், அந்த பள்ளியும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
    Next Story
    ×