search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் 200 சித்த மருத்துவர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்: அமைச்சர் விஜயபாஸ்கர்
    X

    தமிழகம் முழுவதும் 200 சித்த மருத்துவர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்: அமைச்சர் விஜயபாஸ்கர்

    தமிழகம் முழுவதும் 200 சித்த மருத்துவர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகராட்சி காமராஜபுரம் அரசு ஆரம்ப நகர்புற சுகாதார நல மையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம் திறப்பு விழா நடந்தது.

    விழாவுக்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு காமராஜபுரம் அரசு ஆரம்ப நகர்புற சுகாதார நல மையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் பொதுமக்கள் பார்த்து விழிப்புணர்வு பெரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த டெங்கு கொசு உருவாகும் காரணிகள் மற்றும் டெங்கு கொசு உருவாகாமல் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த காட்சி விளக்க விழிப்புணர்வு கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார்.

    மருத்துவர்களிடம் பொது மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு தொடர்ந்து சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    காமராஜபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப நகர்புற சுகாதார நல மையத்தில் தற்பொழுது தினமும் சுமார் 200 புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகள் நலனை கருத்தில் கொண்டு இம்மையத்தில் 2 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். மேலும் 1 மருத்துவர் நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதே போன்று இம்மையத்தில் விரைவில் மகப்பேறு சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் இப்பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் இம்மையத்திலேயே பிரசவம் பார்த்து பயன் பெறலாம். இப்பகுதியில் உள்ள பொது மக்களின் நலன் கருதி இம்மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    காமராஜபுரம் பகுதி பொதுமக்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையான பட்டா வழங்குதல் கோரிக்கையினை ஏற்று பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள நபர்களுக்கும் பட்டா வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் 744 எம்.டி., எம்.எஸ். முடித்த மருத்துவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதன் மூலம் விரைவில் மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையின் அனைத்து பிரிவுகளிலும் உள்ள காலிப் பணியிடங்கள் 100 சதவீதம் நிரப்பப்பட்டு மருத்துவத்துறையில் காலிப் பணியிடங்கள் இல்லாத நிலையை உருவாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். இதே போன்று சித்த மருத்துவ பிரிவில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இந்த மாதத்திற்குள் 200 சித்த மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட உள்ளனர்.

    மேலும் முன்பு செயல்பட்டு வந்த புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை பெறும் வகையில் ஆம்புலன்ஸ் வசதியுடன் மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டு அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி, புதுக்கோட்டை சார் ஆட்சியர் சரயு, ஆறுமுகம் எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையர் (பொ) ஜீவாசுப்பிரமணியன், இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) மரு.சுரேஷ் குமார், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாரதா, பொது சுகாதார துணை இயக்குநர்கள் பரணிதரன் (புதுக்கோட்டை), கலைவாணி (அறந்தாங்கி), முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பாஸ்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×