search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை மகா தீபத்தன்று மலையேற தடை விதித்ததற்கு எதிர்ப்பு வலுக்கிறது
    X

    திருவண்ணாமலை மகா தீபத்தன்று மலையேற தடை விதித்ததற்கு எதிர்ப்பு வலுக்கிறது

    திருவண்ணாமலையில் மகா தீபத்தன்று பக்தர்கள் மலை ஏற மாவட்ட கலெக்டர் கந்தசாமி தடை விதித்ததற்கு எதிர்ப்பு வலுக்கிறது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரவும் இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படும் தீப திருவிழாவை காண்பதற்காக 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள்.

    தீப திருவிழா வரும், 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 29-ந் தேதி மகா தேரோட்டமும், டிசம்பர் 2-ந் தேதி அதிகாலை கோவில் கருவறை எதிரில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

    இந்த நிலையில் மகா தீபத்தன்று பக்தர்கள் மலை ஏற, கலெக்டர் கந்தசாமி தடை விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கலெக்டர் கூறியிருப்பதாவது:-

    மலை ஏறுவதை தடுப்பது எங்கள் நோக்கம் அல்ல. சமீபத்தில் மலை உச்சியில் விதைப் பந்துகள் தூவப்பட்டுள்ளன. அவை தற்போது செடியாக வளர்ந்து வருகிறது. இந்த சமயத்தில் பக்தர்கள் மலை ஏறிச் சென்றால் செடிகளை எல்லாம் மிதித்து நசுக்கி விடுவார்கள்.

    மலையேறும் பக்தர்கள், தீபம் ஏற்றி முடிந்தவுடன், மரங்களுக்கு தீ வைக்கின்றனர். வயதானவர்கள் பலர் மலை மீது ஏறிச் சென்ற பிறகு இறங்கி வர முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    நெஞ்சு வலி உடையோருக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. சிலர் மலை இடுக்கில் விழுந்து இறக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக இறந்தவர்கள் யார் என்று அடையாளம் காண முடியாத நிலை உள்ளது.

    மலை மீது ஏராளமான புனித தீர்த்தங்கள் உள்ளன. இந்த தீர்த்தங்களில் நீர் வியாபாரம் செய்பவர்கள் அதில் சாணம் கரைத்தல், மண்எண்ணெய், பெட்ரோல் போன்றவற்றை கலப்பதால் விலங்குகள் குடிக்கும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது.

    கடந்தாண்டு போடப்பட்ட குப்பையே இன்று வரை எடுக்கப்படாமல் அப்படியே உள்ளன. அந்த குப்பையை அகற்ற வேண்டுமானால் பல நாட்கள் தேவைப்படும். ஆண்டின் 365 நாட்களில் தீபத் திருவிழா ஏற்றும் ஒரு நாளைக்கு மட்டும் தான் மலை ஏறுவதற்கு தடை விதிக்கிறோம்.

    மற்ற நாட்களில் யார் வேண்டுமானாலும் மலை மீது ஏறிச் சென்று தரிசனம் செய்யலாம். மலையின் புனிதம் காக்கவும், பக்தர்கள் நலன் கருதியுமே தடையை விதித்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

    கலெக்டரின் கருத்துக்கு பல்வேறு அமைப்பு தரப்பில் இருந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. மலை ஏறி, நெய்குட காணிக்கை செலுத்தி வழிபடுவதற்கு தடை விதிக்க கூடாது என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    மேலும், அருணாசலபுராணத்தில் மலை ஏறி வழிபாடு செய்வது முறையாக சுட்டி காட்டப்பட்டுள்ளது. எனவே, தீர்த்தங்களில் வழிபடுவது இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் ஒன்று.

    பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது மாவட்ட நிர்வாகத்தின் கடமை. எனவே, மலையேற தடை விதித்ததை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    இந்து முன்னணி மாவட்ட தலைவர் சங்கர் கூறுகையில்:-

    மலை ஏற தடை விதித்த கலெக்டரின் உத்தரவை நீக்கக்கோரி வழக்கு தொடர உள்ளோம்.

    மேலும், கிரிவலப் பாதையில் அன்னதானம் வழங்குவதற்கும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். இதுபோன்ற உத்தரவுகள், இந்து மரபில் கை வைப்பதாக உள்ளது. மகா தீபத்தன்று மலை ஏறும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க, பல ஆசிரமங்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தயாராக உள்ளன.

    அவர்கள் ஒரு நாள் முழுக்க மலையில் காத்து இருந்து, பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பார்கள். மலையில் தீ தடுப்பு நடவடிக்கைகளை மட்டும் மாவட்ட நிர்வாகம் கவனித்துக் கொண்டால் போதும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் மலையேற தடை விதித்ததை திரும்ப பெறக்கோரி போராட்டம் நடத்த உள்ளனர்.
    Next Story
    ×