search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் 2 பேர் பலி
    X

    ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் 2 பேர் பலி

    ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் 2 பேர் இறந்துள்ள நிலையில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
    கோபி:

    ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலர் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு 40 பேர் இறந்துள்ளனர். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டும் பலர் பலியாகி உள்ளனர்.

    தற்போது மேலும் 2 பேர் டெங்கு காய்ச்சலுக்கு இறந்துள்ளனர்.

    சிவகிரி லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் சுபஸ்ரீ (வயது 8). இவள் சிவகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    கடந்த 1 வாரமாக சுமதி காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாள். சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பிறகு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள்.

    அங்கு பரிசோதனை செய்தபோது மாணவிக்கு டெங்கு அறிகுறி இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சுபஸ்ரீயை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி சுபஸ்ரீ பரிதாபமாக இறந்தாள். மாணவியின் உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி பார்க்க உருக்கமாக இருந்தது.

    இதேபோல கோபி அருகே டெங்கு காய்ச்சலுக்கு ஒரு வாலிபர் இறந்தார். கோபி அருகே உள்ள ல.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். ஒட்டல் தொழிலாளி. இவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 19). பிளஸ்-2 படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.

    கடந்த சில நாட்களாக பாலகிருஷ்ணன் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    அவருக்கு டெங்கு பாதிப்பு இருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    சுபஸ்ரீ, பாலகிருஷ்ணன் ஆகியோருடன் சேர்த்து ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்தது.
    Next Story
    ×