search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தூரில் நடந்த அ.தி.மு.க. அம்மா அணி பொதுக்கூட்டத்தில் தங்கதமிழ்ச்செல்வன் பேசினார்.
    X
    சாத்தூரில் நடந்த அ.தி.மு.க. அம்மா அணி பொதுக்கூட்டத்தில் தங்கதமிழ்ச்செல்வன் பேசினார்.

    வருமான வரி சோதனைக்கு பயந்து ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ் மத்திய அரசிடம் பணிந்து விட்டனர்: தங்க தமிழ்ச்செல்வன்

    எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் வருமான வரி சோதனைக்கு பயந்து மத்திய அரசிடம் அடிபணிந்து விட்டனர் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் சாத்தூரில் அ.தி.மு.க. 46-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. விருதுநகர் மாவட்ட செயலாளர் எதிர்க்கோட்டை சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    கொள்கை பரப்புச்செயலாளர் தங்க தமிழ்செல்வன், இலக்கிய அணிச் செயலாளர் டேவிட் அண்ணாதுரை உள்பட பலர் பேசினர்.

    கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் பேசியதாவது:-

    ஜெயலலிதா இருக்கும் போது சசிகலா நினைத்திருந்தால் முதலமைச்சராக பதவியேற்றிருக்க முடியும். சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்ட எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் இன்று சசிகலாவுக்கு துரோகம் செய்து விட்டனர்.

    ஆட்சியை காப்பாற்றிய நாங்கள் தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளோம். ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளனர்.

    எடப்பாடி அணிக்கு போயிருந்தால் எங்களுக்கு எடைக்கு எடை கொடுத்திருப்பார்கள். கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் தினகரன் பக்கம் அணிவகுத்து உள்ளோம். முறைப்படி இரட்டை சிலை சின்னம் எங்களுக்கு தான் வரவேண்டும். அதற்கான உரிமை எங்களிடம் தான் உள்ளது.

    சசிகலா சொன்னதால் தான் எடப்பாடியை முதல்வராக்கினோம். சசிகலா இல்லாமல் இந்த அரசு கிடையாது. எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் பக்கம் பொதுமக்கள், கட்சியினர் என யாரும் கிடையாது.

    தினகரன் பக்கம் 2கோடி தொண்டர்கள் உள்ளனர். தற்போது தேர்தல் நடந்தாலும் தினகரன் அணி மிகப்பெரிய வெற்றிபெறும். மக்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இல்லாததை தெரிந்து கொண்ட மோடி, கருணாநிதி வீட்டிற்கு சென்றார்.

    சேகர்ரெட்டி வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் சிக்கிய டைரி மத்திய அரசிடம் உள்ளது. இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் வருமான வரி சோதனைக்கு பயந்து மத்திய அரசிடம் அடிபணிந்து விட்டனர்.

    எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மேலும் 20 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்திக்க போவதாக வந்த தகவலால் மிரட்டும் நோக்கில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது.

    அ.தி.மு.க. தொண்டர்கள் கோவில் போன்று வணங்கும் போயஸ்கார்டன், கோடநாட்டிலும் சோதனை நடத்தியதை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். தமிழகத்தையும், அ.தி.மு.க.வையும் தினகரனால் மட்டுமே காப்பாற்ற முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் இன்பத்தமிழன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் சிவசாமி, மாவட்ட பொருளாளர் இளங்கோவன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×