search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. ஆட்சியில் நடந்த தவறுகளை மக்கள் மறக்கவில்லை: ஓ.பன்னீர் செல்வம் பேச்சு
    X

    தி.மு.க. ஆட்சியில் நடந்த தவறுகளை மக்கள் மறக்கவில்லை: ஓ.பன்னீர் செல்வம் பேச்சு

    தி.மு.க. தனது ஆட்சிக் காலத்தில் செய்த தவறுகளை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
    நெல்லை:

    நெல்லையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். கலை உலகிலும், பொதுவாழ்விலும் தனித்துவத்தோடு திகழ்ந்தவர். கிருஷ்ண ஜெயந்தி, காந்தி ஜெயந்தியை போல தமிழக மக்கள் ராமச்சந்திர ஜெயந்தியாக எம்.ஜி.ஆர். பிறந்த நாளை கொண்டாடி மகிழ்கிறார்கள். எளிய மக்களுக்கு தெய்வமாகவும், எதிராளிகளுக்கு புரியாத புதிராகவும் திகழ்ந்ததோடு உதவும் குணத்தில் தனி முத்திரை பதித்தவர்.

    ஒருவருக்கு ஒரு பொருளை கொடையளிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால், அதனை உடனே செய்து முடிக்க வேண்டும் என்பதை செய்து காட்டியவர். தமிழக மக்களுக்கு மனமுவந்தும், மனம் மகிழ்ந்தும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து காட்டினார். அவரது வழியில் வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் ஏழைகளுக்கு அட்சய பாத்திரமாக திகழ்ந்தார்.

    தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் நீதியும், நிதியும் முறையாக கிடைக்க அயராது உழைத்தார். 16 லட்சமாக இருந்த கட்சி தொண்டர்களின் எண்ணிக்கையை 1.5 கோடியாக உயர்த்தினார். தமிழகத்தில் 27 ஆண்டு கால ஆட்சியை அ.தி.மு.க. அளித்துள்ளது. அ.தி.மு.க. மக்கள் இயக்கமாகவே உருவாக்கப்பட்டது. அதற்கான கரு திருநெல்வேலி உருவானது.

    அ.தி.மு.க. ஆட்சி தொடரக்கூடாது என சிலர் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். விசுவாசம் மிகுந்த தொண்டர்கள் இருக்கும் வரை அந்த எண்ணங்கள் தவிடு பொடியாகும். மேலும் அ.தி.மு.க. மக்கள் இயக்கமாக நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும்.

    எம்.ஜி.ஆர். மறைவின் போது தமிழகம் தங்களுக்குத் தான் என்ற எண்ணத்தோடு செயல்பட்ட தி.மு.க.வுக்கு ஜெயலலிதாவின் வளர்ச்சியால் படுதோல்வி ஏற்பட்டது. இப்போது அவர் மறைந்த பின்பு தாங்கள் தான் முதல்வர் என மீண்டும் தி.மு.க. எண்ணுகிறது. அது ஒருபோதும் நடக்காது. அரசை கலைக்கும் அவர்களது திட்டம் பலிக்காது.


    தி.மு.க. தனது ஆட்சிக் காலத்தில் செய்த தவறுகளை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். முன்னாள் முதல்வர் அண்ணாவால் கிடைத்த ஆட்சியை குடும்ப ஆட்சியாக தி.மு.க.வினர் மாற்றியது. மக்களிடம் நன் மதிப்பை பெற்ற எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்கியது. மத்திய அரசில் அங்கம் வகித்த போதும் தமிழக ஜீவாதார பிரச்சனைகளான காவிரி, முல்லை பெரியாறு பிரச்சனைகளில் தமிழர்களின் உரிமைகளை காக்க தவறியது.

    இலங்கையில் நடைபெற்ற போரையும், அதனால் அப்பாவி தமிழர்கள் உயிரிழந்ததையும் தடுக்க தவறியது போன்ற பழைய சம்பவங்களால் தி.மு.க. மீது மக்கள் தீராத கோபத்தில் உள்ளனர். இதனை அக்கட்சியினர் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உணர்ந்து செயல்பட வேண்டும். எத்தனை தேர்தல் வந்தாலும் தி.மு.க.வால் வெற்றியை பெற முடியாது.

    ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சாதனை பட்டியல்கள்தான் அதிகம். தீராத மின் தட்டுப்பாட்டால் தவித்த தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுத்தது, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியாக சட்ட போராட்டம் நடத்தி வெற்றி கண்டது.

    முல்லை பெரியாறு அணையில் நீர்தேக்கும் அளவை மீண்டும் 142 அடியாக உயர்த்தியது என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசின் சாதனைகள் ஏராளம். அதனால் தான் மக்களின் நம்பிக்கை வாக்குகளால் மக்களவை தேர்தலிலும், சட்ட பேரவை தேர்தலிலும் தொடர் வெற்றிகளை குவித்தது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் காட்டிய பாதையில் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படும்.

    இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
    Next Story
    ×