search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரியால் மகா தீப நெய் காணிக்கை கட்டணம் ரூ.400 ஆக உயர்வு
    X

    ஜி.எஸ்.டி. வரியால் மகா தீப நெய் காணிக்கை கட்டணம் ரூ.400 ஆக உயர்வு

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்ற அளிக்கப்படும் நெய் காணிக்கை கட்டணம் ரூ.400 ஆக உயர்த்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி வருகிற 2-ந்தேதி மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் எரியும். மகா தீபத்துக்கு பக்தர்கள் நெய் காணிக்கை வழங்குவார்கள். வெளியூர் பக்தர்கள் ஆன்லைனில் டி.டி. எடுத்தும், நெய்க்கு ரொக்க பணம் செலுத்தியும் நெய் காணிக்கை செலுத்துவார்கள்.

    காணிக்கை நெய் கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக இதே விலைதான் நீடித்து வந்தது. இந்த நிலையில் ஜி.எஸ்.டி. வரி காரணமாக நெய் விலை உயர்ந்துள்ளது.

    இதன் காரணமாக அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் நெய் காணிக்கை கட்டணம் உயர்ந்துள்ளது.

    இது சம்பந்தமாக கோவில் வளாகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில் நெய் காணிக்கை ஒரு கிலோ ரூ.400 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது பற்றி கோவில் அதிகாரிகள் கூறுகையில்:-

    ஜி.எஸ்.டி. வரி காரணமாக பக்தர்கள் நெய் காணிக்கை கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ ரூ.400 நிர்ணயம் செய்து இந்து அறநிலைய துறை ஆணையரிடம் அனுமதி பெற கடிதம் அனுப்பி உள்ளோம்.

    கட்டண உயர்வுக்கு பக்தர்கள் எதிர்ப்பு அதிகமாக இருந்தால் நெய் காணிக்கை கட்டணத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றனர்.

    இது குறித்து இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் கூறியதாவது:-

    நெய் காணிக்கை கட்டண உயர்வை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக வாபஸ் பெற வேண்டும். பக்தர்களின் நம்பிக்கையை காசாக்ககூடாது. அறநிலையத்துறை செயல் அறமற்ற செயலாக உள்ளது. பக்தியின் பெயரால் வருமானத்தை பெருக்குவதை குறிக்கோளாக செயல்படுகிறது. பக்தர்களின் மன வருத்தத்துக்கு அரசு ஆளாக கூடாது.

    இதேபோல் மகா தீப திருநாள் அன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றார்.

    Next Story
    ×