search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழில் அதிபர் ஆறுமுகசாமி
    X
    தொழில் அதிபர் ஆறுமுகசாமி

    சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான மணல் ஆறுமுகசாமி சிக்கியது எப்படி?

    சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான தொழில் அதிபர் ஆறுமுகசாமி சிக்கியது எப்படி என்பது குறித்த விரிவான தகவல்களை பார்க்கலாம்.
    கோவை:

    கோவையை சேர்ந்தவர் தொழில் அதிபர் ஆறுமுகசாமி. இவர் கல்வி உதவித்தொகை, திருமண உதவி, கட்சியினருக்கு பண உதவி வழங்கி கோவையில் மிகவும் புகழ் பெற்றவர்.

    கடந்த 1996-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் மேயர் பதவிக்கு போட்டியிட முயன்றதாகவும், ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் அரசியல் பின்புலத்தில் இவரது மணல் தொழில் உள்ளிட்ட மற்ற வியாபாரங்களும் அமோகமாக நடந்தது.

    2001-ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது அரசே மணல் விற்பனை செய்யும் என்ற நிலை ஏற்பட்ட போது அந்த உரிமையை இவர் பெற்றதாக கூறப்படுகிறது. அப்போது இவருக்கு எதிராக மணல் வியாபாரிகள் போர்க்கொடி தூக்கினர். அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மணல் ஏற்ற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். அதிகப்படியான மணலுக்கு ரூ.1800 வாங்குகிறார்கள். அதன்மூலம் தினசரி பல்லாயிரக்கணக்கான லாரிகளில் மணல் ஏற்றப்படுகிறது. இதன்மூலம் கோடிக்கணக்கான வருவாய் யாருக்கோ செல்கிறது. மேலும் ஆறுமுகசாமியின் லாரிகளில் மணல் ஏற்றியபின்பே மற்றவர்களுக்கு மணல் தரப்படுகிறது என்றெல்லாம் புகார் கிளப்பினர். மேலும் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

    இந்த மணல் கொள்ளை குற்றச்சாட்டை குறித்து ஆறுமுகசாமி மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. கணக்கில் இல்லாத மணல் அள்ளுவதன் மூலமாக ஆண்டுக்கு ரூ.200 கோடி சசிகலா குடும்பத்திற்கு போவதாகவும் கூறப்பட்டது. இவர் விஜயலட்சுமி என்ற அறக்கட்டளை தொடங்கி அதன்மூலம் ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையையும் வழங்கியுள்ளார்.

    2004-ம் ஆண்டு கோவை மண்டலத்தில் உள்ள 10 பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்களை தீர்மானிக்கும் சக்தியாக சசிகலாவின் உறவினரான ராவணன் இருந்தார். இவருக்கு நிகராக இந்த வேட்பாளருக்கு தேர்தல் செலவு செய்யக்கூடிய சக்தியாக ஆறுமுகசாமி பலரால் பேசப்பட்டார். அந்த வகையில் தன் சமூகத்தினருக்கு அ.தி.மு.க.வில் சீட்டும் வாங்கி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    அந்த தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைய அடுத்த 2006 சட்டசபை தேர்தலிலும் ராவணன், ஆறுமுகசாமியின் கைகளே கொங்கு மண்டல அ.தி.மு.க.வில் ஓங்கி இருந்தது. அப்போது வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலும் கோவையின் பெரும்பாலான தொகுதிகளில் அ.தி.மு.க. வென்றதால் இவரது செல்வாக்கு ஜெயலலிதா, சசிகலா மத்தியில் உயர்ந்தது.

    இந்நிலையில் அரசு மணல் அள்ளும் உரிமை கைமாறியது. இதனால் ஆறுமுகசாமி தரப்பு ஆந்திரா பக்கம் மணல் அள்ள சென்றுவிட்டது. அதே சமயம் கொடநாடு மாளிகையின் மராமத்து பணிகள் புதிய மாளிகை எழுப்பும் பணிகளையெல்லாம் ஆறுமுகசாமியே முன்நின்று கவனித்தார் என்று தகவலும் வெளியாகி உள்ளது.

    2009 பாராளுமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு, நிதி செலவுகளில் ஆறுமுகசாமி பங்கு இருப்பதாக கூறப்பட்டது. அந்த சமயத்திலும் இவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அப்போது சசிகலா குடும்பம் போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டது. ராவணன் போன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இதையடுத்து ஆறுமுகசாமி ஒதுங்கி கொண்டார். ஆனாலும் இவர் தொடர்ந்து கொடநாடு பங்களா கட்டுமான பணியில் ஈடுபடுவதாக மட்டும் தகவல்கள் வந்தன.

    3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கூட்டத்தில் இனி மணல் அள்ளும் பணியை செய்யவே மாட்டேன் என்று ஆறுமுகசாமி கூறியுள்ளார். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு, கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, சசிகலா கைது, தினகரன் கட்சி பொறுப்பு என அரசியல் பரபரப்புக்கு மத்தியிலும் கூட இவர் சத்தமே இல்லாமல் இருந்தார்.

    இப்போது வருமானவரித்துறை அதிகாரிகளிடம் சிக்கிய பின்பே அவரை பற்றிய பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது சசிகலா தரப்புக்கு ஆதரவாக இவர் சில நடவடிக்கைகள் மேற்கொண்டதாகவும், கொடநாடு பங்களாவை உருவாக்கியதில் இவர் பெரும் பங்கை வகித்ததாலும்தான் இவரது வீடு, அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



    Next Story
    ×