search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடநாடு எஸ்டேட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
    X

    கொடநாடு எஸ்டேட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

    மறைந்த முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
    கோத்தகிரி:

    மறைந்த முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ளது.

    இந்த எஸ்டேட் இயக்குனர்களாக சசிகலா, அவரது உறவினர் இளவரசி உள்பட 6 பேர் உள்ளனர். எஸ்டேட் மேலாளராக நடராஜன் என்பவர் உள்ளார். இவர் சசிகலாவின் ஆதரவாளர் ஆவார்.

    இந்த நிலையில் நேற்று கோவையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்றனர். அவர்கள் எஸ்டேட் அலுவலகம் அமைந்துள்ள 4-வது மற்றும் 7-வது கேட் வழியாக உள்ளே நுழைந்தனர்.

    2 கார், ஒரு வேனில் 20 அதிகாரிகள் வந்து இருந்தனர்.

    அவர்கள் முதலில் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள அலுவலகத்திற்கு சென்றதும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் காட்சிகள் பதிவாகாமல் இருக்க வேறு திசைக்கு திருப்பி வைத்தனர்.

    மேலும் வருமான வரித்துறையினர் உள்ளே வந்த காட்சி பதிவுகளை நீக்கும் படி அங்கிருந்த ஊழியர்களிடம் தெரிவித்தனர்.

    பின்னர் எஸ்டேட் மேலாளர் நடராஜன் மற்றும் ஊழியர்களின் செல்போன்களை வருமான வரித்துறை அதிகாரிகள் வாங்கி வைத்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து அங்கு சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் 45 நிமிடம் அங்கு சோதனை நடைபெற்றது. இந்த சோதனை காரணமாக கொடநாடு எஸ்டேட்டின் 4,7.9,10 ஆகிய கேட்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    பின்னர் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனை அழைத்து கொண்டு அருகே கர்சன் என்ற இடத்தில் அமைந்துள்ள கசிகலாவுக்கு சொந்தமான கிரீன் டீ எஸ்டேட்டுக்கு சென்றனர். அங்கு அலுவலக ஆவணங்களை ஆய்வு செய்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.



    இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் ஈளாடாவில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளைக்கு சென்றனர். அந்த வங்கியில் தான் கொடநாடு மற்றும் கர்சன் தேயிலை எஸ்டேட்டின் பண பரிவர்த்தனை, 2 எஸ்டேட்டுகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வங்கி கணக்குகள் உள்ளன.

    அதிகாரிகள் வங்கியில் எஸ்டேட்டுகள் மற்றும் தொழிலாளர்களின் கணக்கு விவரங்களை பெற்றுக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு பின் மீண்டும் கர்சன் எஸ்டேட்டுக்கு சென்றனர்.

    அங்கு தொடர்ந்து சோதனை நடத்தினார்கள். இரவு 7 மணியளவில் ஒரு கார் மற்றும் ஒரு வேனில் அவர்கள் புறப்பட்டு சென்றனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் வேறு ஒரு காரில் 2 அதிகாரிகள் கர்சன் எஸ்டேட்டுக்கு வந்தனர். அங்கு தொடர்ந்து சோதனை நடத்தினர்.

    கொடநாடு கிரீன் எஸ்டேட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ. 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிக்கியதாக கூறப்படுகிறது. இன்று மேலும் சில அறைகளை திறந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த உள்ளனர்.

    அப்போது பல ஆவணங்கள் சிக்கும் என தெரிகிறது.

    பின்னர் அறைகளை பூட்டி சீல் வைத்து சென்றனர். இன்று 2-வது நாளாக கொடநாடு மற்றும் கிரீன் டீ எஸ்டேட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. கிரீன் டீ எஸ்டேட்டுக்கு இன்று காலை 7.20 மணிக்கு 2 காரில் வந்த 6 அதிகாரிகள் உள்ளே சென்று சோதனை நடத்தி வருகிறார்கள்.

    ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொட நாட்டில் உள்ள பங்களாவில் மர வேலை செய்து கொடுத்தவர் கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியை சேர்ந்த மர வியாபாரி சஜீவன். இவருக்கு அங்கு மரக்கடை உள்ளது. அங்கும் சோதனை நடத்தப்பட்டது.

    சஜீவன் மர மில்லுக்கு அதிகாரி முகமது சர்ப்ராஷ் தலைமையிலான வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் ஒரு காரில் வந்து மர மில்லில் அதிரடி சோதனை நடத்தினார்கள். மர மில்லுக்கு வேலைக்கு வந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    கூடலூர் அருகே உள்ள தொரப்பள்ளியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் சிக்மாயார் 6-ம் நம்பர் என்ற இடத்தில் சஜீவனுக்கு சொந்தமான காபி எஸ்டேட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அங்கிருந்த பங்களாவிலும் சோதனை நடத்தப்பட்டது. இங்கு இன்று 2-வது நாளாக சோதனை நடைபெற உள்ளது.

    கொடநாடு, கிரீன் டீ எஸ்டேட், சஜீவன் மர மில் உள்ளிட்ட இடங்களில் நடத்திய சோதனையின் போது வருமான வரித்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×