search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புகழேந்தி
    X
    புகழேந்தி

    கரூரில் வனத்துறை ஊழியர் மனைவி, மகனுடன் வி‌ஷம் குடித்து தற்கொலை

    கரூரில் வனத்துறை ஊழியர் தனது மனைவி, மகனுடன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கரூர்:

    கரூர் தெற்கு காந்தி கிராமம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனியில் வசித்து வந்தவர் புகழேந்தி (வயது 45). வனத்துறையில் வனக்காப்பாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மலர்க்கொடி (37). இந்த தம்பதிக்கு சுகன் ராஜன் (12) என்ற ஒரு மகன் இருந்தான். அவன் துளசி கொம்பில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்தநிலையில் 1½ ஆண்டுக்கு முன்பு கடவூர் வனப்பகுதிக்கு சென்று பணியை முடித்துவிட்டு கரூர் நோக்கி புகழேந்தி மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அப்போது வரவனை என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டது. கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் மாதக்கணக்கில் தங்கி சிகிச்சை பெற்றும் அவர் முழுமையாக குணமாகவில்லை. இதற்காக அவர் ரூ.10 லட்சம் வரை செலவு செய்துள்ளார். விபத்துக்கு பின்னர் புகழேந்தி 2 நிமிடம் கூட நிற்கவோ, நடக்கவோ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

    இதனால் மிகவும் விரக்தியடைந்த புகழேந்தி வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மகன் சுகன்ராஜ் பிறந்தநாள் விழாவை விமரிசையாக கொண்டாடினார். அப்போது சிறுவனை வாழ்த்த வந்தவர்கள் புகழேந்தியிடம் நீங்கள் இன்னும் குணமாகவில்லையா என்று கேட்டுள்ளனர்.

    மேலும் பணியில் தொடர்ந்து நீடித்த அவருக்கு கடந்த 6 மாதங்களாக பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் அந்த சம்பளமும் வழங்கப்படவில்லையாம். அத்துடன் கடன் பிரச்சனையும் இருந்து வந்துள்ளது.

    இதனால் மிகுந்த மன வேதனைக்கு தள்ளப்பட்ட புகழேந்தி இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதைவிட சாவதே மேல் என்று எண்ணி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். இதுபற்றி தனது மனைவிடம் கூறியுள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட மலர்க்கொடி கடைக்கு சென்று தென்னை மரத்திற்கு வைக்கும் வி‌ஷ மாத்திரையை வாங்கி வந்துள்ளார்.

    நேற்று இரவு புகழேந்தி தனது மனைவி மற்றும் மகனுக்கு வி‌ஷ மாத்திரைகளை கொடுத்து, தானும் சாப்பிட்டுள்ளார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வீடு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி அழைத்தனர். ஆனால் எந்த பதிலும் இல்லை.

    இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு புகழேந்தி இறந்த நிலையில் கிடந்தார். மலர்க்கொடி, சுகன்ராஜ் இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் விரைந்து வந்த பசுபதிபாளையம் போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் வழியிலேயே மலர்க்கொடி இறந்தார். தனியார் ஆஸ்பத்திரியில் வைத்து சிறுவன் சுகன் ராஜூம் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×