search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் கனமழை நீடிப்பு - பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது
    X

    நெல்லை மாவட்டத்தில் கனமழை நீடிப்பு - பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது.
    நெல்லை:

    வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்கிறது. நேற்றும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

    பாபநாசம் அணை, பாளை, களக்காடு, ஆலங்குளம், அம்பை, பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை கொட்டியது. மாலையில் பெய்ய தொடங்கிய மழை நள்ளிரவு வரை பெய்து கொண்டே இருந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டை பகுதியில் 66 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையினால் மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவி, குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள கால்வாய்களிலும் அதிகளவு தண்ணீர் செல்கிறது. தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களாக பெய்த மழையினால் குண்டாறு, கொடுமுடியாறு, நம்பியாறு ஆகிய 3 அணைகள் நிரம்பியுள்ளன.

    பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்த அணையின் நீர்மட்டம் நேற்று 95.65 அடியாக இருந்தது. இன்று காலை இது 98.80 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 2,462 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாலையில் இந்த அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டிவிடும்.



    இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 109.61 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் 112.20 அடியாக உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 75.80 அடியாக இருந்தது. இன்று இது 78 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,542 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 74.20 அடியாக இருந்த கடனாநதி அணை நீர்மட்டம் 76 அடியாகவும், 65.50 அடியாக இருந்த ராமநதி அணை நீர்மட்டம் 67 அடியாகவும், 66.28 அடியாக இருந்த கருப்பாநதி அணை நீர்மட்டம் 67.59 அடியாகவும், 23 அடியாக இருந்த வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 25 அடியாகவும் உயர்ந்துள்ளன.

    தொடர்ந்து மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் இன்று காலையில் இருந்து லேசான வெயில் அடித்தது. மதியம் கருமேகங்கள் சூழ்ந்து சில இடங்களில் மழை பெய்தது.

    பலத்த மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து சிறுமி ஒருவர் உயிரிழந்தார். வாசுதேவநல்லூர் அருகே உள்ள அ.திருமலாபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது 3 வயது மகள் பாரதி, அதே பகுதியில் உள்ள அவரது தாத்தா ஏசுராஜன் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார்.

    ஏற்கனவே பெய்த மழையினால் ஏசுராஜன் வீட்டின் பின்பகுதி சுவர் ஈரமாக காணப்பட்டது. சிறுமி பாரதி விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென சுவர் இடிந்து விழுந்தது. இதில் சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

    நெல்லை மேலப் பாளையம் அருகே உள்ள தருவை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியான ஈஸ்வரன் (வயது 45), நேற்று மாலை தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது இடி-மின்னலுடன் மழை கொட்டியது. மின்னல் தாக்கியதில் ஈஸ்வரன் காயமடைந் தார். அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அம்பை ஊர்க்காடு தெற்கு தெருவில் மாடக்கண்ணு அம்மாள்(90) என்பவரது வீட்டின் ஒருபக்க சுவர் மழையினால் இடிந்து விழுந்தது. இதில் மாடக்கண்ணு அம்மாள் காயமடைந்தார். அவர் அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெல்லை தச்சநல்லூர் ஊருடையான்குடியிருப்பில் நம்பிராஜன் தெருவில் சுப்பையா என்பவரது வீடு இடிந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    நெல்லை மாவட்ட அணை மற்றும் இதர பகுதிகளில் இன்று காலை வரை பதிவான மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    பாளை - 66
    பாபநாசம் - 48
    நெல்லை - 40.20
    ஆலங்குளம் - 33.2
    களக்காடு - 31.2
    கன்னடியன் கால்வாய் - 20
    அம்பை - 20
    ராமநதி - 20
    சேரன்மகாதேவி - 19
    சேர்வலாறு - 19
    கருப்பாநதி - 18
    மணிமுத்தாறு - 13
    சங்கரன்கோவில் - 12
    அடவிநயினாறு அணை - 10
    நாங்குநேரி - 10
    குண்டாறு - 9
    சிவகிரி - 7
    செங்கோட்டை - 6
    கடனாநதி அணை - 6
    ஆய்க்குடி - 5.4
    Next Story
    ×