search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை கவுரவத்தை காப்பாற்ற எந்த தியாகமும் செய்ய தயார்: நாராயணசாமி
    X

    புதுவை கவுரவத்தை காப்பாற்ற எந்த தியாகமும் செய்ய தயார்: நாராயணசாமி

    புதுவை கவுரவத்தை காப்பாற்ற எந்த தியாகமும் செய்ய தயார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் பண மதிப்பிழப்பு சட்டத்தை அமல்படுத்திய மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்பு பணம், கள்ள நோட்டு ஒழிக்கப்படும், தீவிரவாதிகள் கையில் உள்ள பணம் வெளியில் வரும் என்று அரசு கூறியது.

    ஆனால், இந்த 3ம் நடக்கவில்லை. ரூ.500 மற்றும் ரூ.ஆயிரம் நோட்டு ஒட்டுமொத்த 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி புழக்கத்தில் இருந்தது. இதில் 17 ஆயிரம் கோடி நோட்டுகளை தவிர மீதி பணம் வங்கிகளுக்கு வந்து விட்டது. கறுப்பு பணம் வெளியே வரவில்லை.

    பா.ஜனதாவினரின் கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றத்தான் இத்திட்டம் உதவியது. பண மதிப்பிழப்பு மற்றும் சரக்கு சேவை வரியால் நாடு முழுவதும் அனைத்து மாநிலத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


    நடுத்தர வியாபாரிகள், சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலையில்லா திண்டாட்டம் பெருகியுள்ளது.

    புதுவையில் 30 சதவீத வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மோடி தலைமையிலான பா.ஜனதா அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும், மாற்று கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் ஆட்சியை கலைக்கும் வேலையில் பா.ஜனதா அரசு ஈடுபட்டு வருகிறது.

    ஆட்சிக்கு எதிராக பேசுபவர்கள் மீது வருமான வரித்துறை, சி.பி.ஐ ஏவி விடப்படுகிறது. சர்வாதிகார ஆட்சி நடத்தப்படுகிறது. பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் ஊழல் கொடி கட்டி பறக்கிறது. அமித்ஷா மகன் நடத்தி வந்த நிறுவனம் திடீரென லாபத்தில் இயங்குகிறது.

    ஊழல்வாதிகள் பா.ஜனதாவில் இணைந்துவிட்டால் புனிதமடைகின்றனர். நமது மாநிலத்தில் சட்ட மன்றத்திற்கு அருகில் ஒருவர் உள்ளார். அவருக்கு இலவச அரிசி, விவசாய கூட்டுறவு கடன், தாழ்த்தப்பட்டோருக்கு கல்வி நிதி, பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி சலுகை, வேட்டி, சேலை போன்ற கோப்புகளை அனுப்பினால் உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பி விடுகிறார்.

    உச்சநீதிமன்றம் நேற்றைய தினம் ஒரு தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டெல்லி மாநில அரசு தொடர்பாக இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். அந்த தீர்ப்பில் மாநில அரசின் வளர்ச்சிக்கு கவர்னர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். மாநில அரசுக்கு குந்தகம் விளை விக்கும் வகையில் செயல் படக்கூடாது என கூறியுள்ளார்.

    இதன்பிறகாவது இங்குள்ளவருக்கு புத்தி வருமா? வாரிய தலைவர் பதவி நீட்டிப்புக்காக கோப்பை கவர்னருக்கு அனுப்பினோம். ஒரு மாதம் கவர்னர் அந்த கோப்பை வைத்திருந்தார்.


    பின்னர் துறை அதிகாரிகளிடம் வாரிய தலைவர் செயல்பாடு குறித்து சான்றிதழ் அனுப்பும்படி கோரினார். இதனால் அமைச்சரவையில் முடிவெடுத்து மீண்டும் கோப்பு அனுப்பினோம். கவர்னர் அதை மத்திய உள்துறைக்கு அனுப்பினார்.

    மத்திய உள்துறை வாரிய தலைவர் பதவி நீட்டிப்புக்கு அனுமதி அளித்ததோடு, இது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என உத்தரவும் பிறப்பித்துள்ளது.

    இந்த உத்தரவையும் கவர்னர் தடுத்து நிறுத்தியுள்ளார். மாநில அரசு உத்தரவையும் மதிக்கவில்லை. மத்திய அரசு உத்தரவையும் மதிக்க வில்லை. பா.ஜனதா நடத்திய ஆயுத பூஜை விழாவில் கவர்னர் பங்கேற்கிறார். கவர்னர் பா.ஜனதாவின் ஏஜெண்டா? பதவி எங்களுக்கு பெரிதல்ல. புதுவை மக்களின் கவுரவத்தை பாதுகாக்கவும், உரிமைகளை காப்பாற்றவும் எத்தகைய தியாகமும், போராட்டமும் செய்ய தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×