search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா ஆட்சியில் தலித்துகள் மீதான தாக்குதல் அதிகரித்து விட்டது: பினராயி விஜயன் பேச்சு
    X

    பா.ஜனதா ஆட்சியில் தலித்துகள் மீதான தாக்குதல் அதிகரித்து விட்டது: பினராயி விஜயன் பேச்சு

    பாரதிய ஜனதா ஆட்சியில் தலித்துகள் மீதான தாக்குதல் அதிகரித்து விட்டதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம் சாட்டினார்.
    மதுரை:

    மதுரையில் தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் சார்பில் அகில இந்திய மாநாடு 3 நாட்கள் நடைபெற்றது.

    நிறைவு நாளான நேற்று பழங்காநத்தத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்ஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியதாவது:-

    இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிரான அடக்கு முறை நெடுங்காலமாக தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போதைய பா.ஜனதா அரசு சாதி ரீதியிலான ஒடுக்கு முறையை உயர்த்தி பிடிக்கிறது.

    இந்தியாவில் 18 நிமிடங்களுக்கு ஒருமுறை சாதிய ஒடுக்குமுறை நடக்கிறது. ஒவ்வொரு நாளும் 3 தலித்துகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். 2 பேர் கொல்லப்படுகிறார்கள். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக பெரியார் இறுதி வரை போராடினார்.

    கேரள மாநிலம் வைக்கத்திலும் போராட்டங்கள் நடத்தினார். ஆனாலும் தற்போதைய பா.ஜனதா ஆட்சியில் தலித்துகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.

    தேசிய குற்ற ஆவணங்கள் அடிப்படையில் கடந்த 2012-ல் 33 ஆயிரம் பேர் மீதும், 2015-ல் 45 ஆயிரம் பேர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    பொருளாதாரம், வேலை வாய்ப்பிலும் தலித்துகள் பின்தங்கி உள்ளனர். அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கவில்லை. மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைந்த பிறகு மத்திய பட்ஜெட்டில் தலித்துகளுக்கான வளர்ச்சி நிதி குறைக்கப்பட்டுள்ளது. தலித் பெண்கள் வளர்ச்சிக்கு ஒரு சதவீத நிதி கூட ஒதுக்கப்படவில்லை.

    மேலும் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்பான வழக்குகளில் விதிக்கப்படும் தண்டனையும் குறைந்து வருகிறது. சாதிய அமைப்பு முறையை ஒழிப்பதே கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய நோக்கமாகும்.

    முற்போக்குவாதிகள் சாதி ஒடுக்குமுறையை எதிர்க்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். சாதி அமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது. சாதிய ஒடுக்குமுறைகளை ஒழித்து மனித நேயத்தை வளர்க்க முன்வரவேண்டும்.

    பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருவதால் தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திரைப்பட இயக்குனர் ரஞ்சித் பேசுகையில், நவீன இந்தியாவில் சாதி ஒழிப்பு போராட்டம் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை நடத்துபவர்கள் நசுக்கப்படுகிறார்கள். சாதிய சக்திகள் அதிகம் வளர்ச்சி அடைந்துள்ளன. கிராமங்களில் சாதிய பிடிப்பு அதிகம் உள்ளது.

    எனவே மனதளவில் சாதியை ஒழிக்க முன் வரவேண்டும். சக மனிதர்களை சமமாக நடத்த வேண்டும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி அமைப்பின் மாநில தலைவர் சம்பத், மாநில குழு உறுப்பினர் கணேசன், கேரள முன்னாள் சபாநாயகர் ராதா கிருஷ்ணன், ஆதிதமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×