search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்று மீண்டும் கனமழை: சென்னை புறநகரில் வெள்ள பீதி
    X

    இன்று மீண்டும் கனமழை: சென்னை புறநகரில் வெள்ள பீதி

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் தாழ்வான இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
    தாம்பரம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் தாழ்வான இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளால் மழைநீர் செல்ல வழியின்றி குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கிறது.

    இதைபோல் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. திரும்பிய திசை எல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    நேற்று காலை முதல் மழை இல்லாததால் புறநகர் பகுதி மக்கள் நிம்மதி அடைந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் இடியுடன் கனமழை கொட்டியது. இன்று காலையும் பலத்த மழை பெய்தது.

    இதனால் வெள்ள நீர் வடிந்திருந்த இடங்களில் மீண்டும் மழைநீர் புகுந்தது. இதனால் பொது மக்கள் வெள்ள பீதியில் உள்ளனர்.

    தாம்பரம் சி.டி.ஓ. காலனி, முடிச்சூர் கிருஷ்ணா நகர், வரதராஜபுரம், பி.டி.சி. காலனி, பார்வதி நகர், ராயப்பா நகர், அஷ்டலட்சுமி நகர் பகுதிகளில் தொடர்ந்து மழைநீர் தேங்கி கிடக்கிறது. கடந்த 5 நாட்களாக வீட்டில் இருந்தவர்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகிறார்கள். பெரும்பாலானோர் வீடுகளை காலி செய்துவிட்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    இதேபோல் பெருங்களத்தூர் அன்னை அஞ்சுகம் நகர், சமத்துவ பெரியார் நகர் பகுதிகளில் தெருக்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.



    இன்று காலையும் மழை பெய்ததால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர்.

    பெங்களத்தூரில் உள்ள அரசு பள்ளி நிவாரண முகாமில் 400 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆதனூர் முகாமில் 50-க்கும் மேற்பட்டோர் திருமண மண்டபத்தில் தங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    தொடர் மழை காரணமாக ஆதனூர், மணிமங்கலம், மதனபுரம், மகாலட்சுமி நகர், செம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஏரிகள் முழுவதும் நிரம்பி வழிகிறது. ஏரிகளில் இருந்து வெளியேறும் நீர் அருகில் உள்ள குடியிருப்புகளில் புகுந்துள்ளன.

    வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.
    Next Story
    ×