search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் மற்றும் புதுவையில் 9-ம் தேதி வரை மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்
    X

    தமிழகம் மற்றும் புதுவையில் 9-ம் தேதி வரை மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

    தமிழகம் மற்றும் புதுவையில் 9-ம் தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்கியதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்து வருகிறது. ஒரு வார காலம் கடலோர மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் தாழ்வான பகுதிகள் தத்தளிக்கின்றன. பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களையும் வெள்ளநீர் மூழ்கடித்துள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இன்று முதல் படிப்படியாக மழை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றும் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.

    இந்நிலையில், அடுத்து வரும் நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பினை நேற்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்தது. அதில், இன்று தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் 9-ம் தேதிவரை ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களில் உட்புற பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை  பெய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைப் பொருத்தவரை, அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய கனமழையோ பெய்யக்கூடும். எனவே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில்,  தமிழ்நாடு மற்றும் புதுவையின் உட்புற பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என்றும், கேரளாவின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகளில் கனமழை பெய்யும் என்றும், 8-ம் தேதி அந்தமான் நிகோபார் தீவுகளில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.


    Next Story
    ×