search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘தினத்தந்தி’ பவள விழாவில் பங்கேற்க நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி
    X

    ‘தினத்தந்தி’ பவள விழாவில் பங்கேற்க நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி

    ‘தினத்தந்தி’ நாளிதழின் பவளவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ள பிரதமர் மோடி நாளை சென்னை வர உள்ளதால் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
     சென்னை:

    ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 1942-ம் ஆண்டு தொடங்கிய ‘தினத்தந்தி’ நாளிதழானது, இந்தியாவின் நம்பர் 1 தமிழ் நாளிதழ் என்ற சிறப்புடன் திகழ்கிறது.

    தமிழகத்தில் 13 நகரங்களிலும், பிற மாநிலங்களில் புதுச்சேரி, பெங்களூரு, மும்பை நகரங்களிலும், வெளிநாட்டில் துபாயிலும் என 17 நகரங்களில் இருந்து தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ‘தினத்தந்தி’, மக்கள் பணியில் 75 ஆண்டுகளை பூர்த்தி செய்து பவள விழாவை கொண்டாடுகிறது.

    பவள விழா சென்னை சேப்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ள சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா கலையரங்கத்தில் நாளை (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

    விழாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குவதுடன், பவள விழா மலரை வெளியிட்டு, விருதுகள் வழங்கி வாழ்த்தி பேசுகிறார். ‘தினத்தந்தி’ இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மேலும், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார்.

    புதுடெல்லியில் இருந்து நாளை காலை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்து சேரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் அரங்கிற்கு வருகிறார்.

    நாளை பிரதமர் வர உள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்திலிருந்து சென்னை பல்கலைக்கழகம் வரை பிரதமர் வரும் பாதையில் சுமார் 10 ஆயிரம் போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×