search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடுமலையில் விஜயகாந்த் நாளை ஆர்ப்பாட்டம்
    X

    உடுமலையில் விஜயகாந்த் நாளை ஆர்ப்பாட்டம்

    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கோரி உடுமலைப்பேட்டை பஸ் நிலையத்தில் நாளை காலை 10 மணியளவில் தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
    உடுமலை:

    பரம்பிக்குளம் - ஆழியாறு திட்ட ஒப்பந்தப்படி தமிழகத்திற்கு 30.5 டி.எம்.சி.யும், கேரளாவுக்கு 19.55 டி.எம்.சி.யும் நீர் பங்கீடு செய்து கொள்ள வேண்டும். இதில் பரம்பிக்குளம், சோலையாறு, கீழ்நீராறு, மேல்நீராறு, தூணகடவு, பெருவாரிபள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய அணைகள் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

    இதில் ஆனைமலையாறு என்ற அணை மட்டும் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. கேரளம் இடைமலையாறு அணை கட்டி முடித்த பிறகு தமிழகம் ஆனைமலையாறு அணையை கட்டிகொள்ளலாம் என்பது ஒப்பந்தம். ஆனால் கேரளம் இடைமலையாறு அணையை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே கட்டி முடித்து விட்டது.

    ஆனால் தற்போது வரை அணை கட்டி முடிக்கப்படவில்லை என்று கேரள அரசு சூழ்ச்சி செய்து வருகிறது. இதனால் ஆனைமலையாறு அணையை தமிழகம் கட்ட முடியாமல் இருந்து வருகிறது.

    2.5 டி.எம்.சி. தண்ணீர் ஆனைமலையாறு அணை மூலம் தமிழகம் எடுத்து கொள்ள முடியும். ஆனால் தற்போது வரை அணை கட்ட முடியாமல் 2.5 டி.எம்.சி. தண்ணீரை இழந்து வருகிறது.

    இந்த அணை கேரள பகுதிக்குள் இட்லியாறு - ஆனைமலையாறு ஒன்று சேரும் இடத்தில் கட்டப்பட வேண்டும். அங்கிருந்து கால்வாய் அமைத்து கீழ்நீராறு அணைக்கு தண்ணீர் கொண்டுவந்து அங்கிருந்து தமிழக பகுதிக்கு பயன்படுத்தலாம். கேரள அரசின் சூழ்ச்சியின் காரணமாக இந்த திட்டம் தற்போது வரை நிறைவேற்றப்பட முடியவில்லை.

    இதேபோல் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் நீராற்றின் தண்ணீரை முழுமையாக தமிழகம் பயன்படுத்தி கொள்ளலாம் என்பது ஒப்பந்தம். நீராற்றின் குறுக்கே சிறிய தடுப்பணை கட்டி அங்கிருந்து கால்வாய் அமைத்து உடுமலை அருகே நல்லாறு என்னும் இடத்தில் நல்லாறு என்னும் அணை கட்டி அங்கிருந்து காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும். இதனால் 150 கி.மீ. தண்ணீர் விரையம் குறையும்.

    தற்போது பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் நீராற்றில் இருந்து சோலையாறு, பரம்பிக்குளம், தூணகடவு, பெருவாரிபள்ளம் ஆகிய அணைகளுக்கு சென்று சர்கார்பதி மின்நிலையம் வழியாக காண்டூர் கால்வாய்க்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. பின்னர் அங்கிருந்து திருமூர்த்தி அணைக்கு செல்கிறது.

    நீராற்றில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் செல்ல 200 கி.மீ. தூரமாகிறது. இதனால் ஆவியாதல், நீர் கசிதல் போன்றவற்றால் தண்ணீர் இழப்பு ஏற்படுகிறது. மேலும் பரம்பிக்குளம், தூணகடவு, பெருவாரிபள்ளம் ஆகிய 3 அணைகளும் கேரள மாநிலத்துக்குள் இருப்பதால் தமிழக அதிகாரிகள் அங்கு சென்று பணி செய்வதில் பல்வேறு சிக்கல்களை கேரள அரசு ஏற்படுத்துகிறது.

    நல்லாறு திட்டத்தை நிறைவேற்றினால் நீராற்றின் தண்ணீர் கேரளத்துக்குள் செல்லாமல் நேரடியாக உடுமலை திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்ல முடியும்.

    கிடப்பில் போடப்பட்ட இந்த ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கோரி உடுமலைப்பேட்டை பஸ் நிலையத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சியினர் கலந்து கொள்கிறார்கள்.

    இதில் கலந்து கொள்வதற்காக உடுமலை வரும் விஜயகாந்த்துக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×