search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பணை சேற்றில் சிக்கிய காட்டுயானை
    X
    தடுப்பணை சேற்றில் சிக்கிய காட்டுயானை

    கோவை அருகே உணவு தேடி வந்த யானை சேற்றில் சிக்கியது: மீட்கும் முயற்சியில் வனத்துறையினர்

    கோவை அருகே உணவு தேடி வந்த ஒரு ஆண் காட்டுயானை புதர் நிறைந்த சேற்றில் சிக்கியதை தொடர்ந்து அதை மீட்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
    கவுண்டம்பாளையம்

    கோவை ஆனைகட்டி சாலை தடாகம் 24.வீரபாண்டி ஊராட்சிக்குட்பட்டது அய்யாசாமி கோவில். இதன் அருகே குட்டை உள்ளது. தூர்வாரப்பட்ட இந்த குட்டையில் தற்போது தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் கடந்த 1 வாரமாக விட்டுவிட்டு கன மழை பெய்தது. இதனால் இந்த குட்டையில் தண்ணீர் நிரம்பி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. நேற்று இரவு உணவு தேடி மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து 2 காட்டுயானைகள் வந்தன.

    தாளியூர் பகுதியில் ராஜ கோபால், சுலோச்சனா ஆகியோர் தோட்டத்தில் வாழை பயிரிட்டிருந்தனர். மின்வேலியை தகர்தெறிந்து விட்டு காட்டு யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து வாழை மரங்களை கபளீகரம் செய்தன. விடியவிடிய அந்த பகுதியில் சுற்றித்திரிந்த யானைகள் அதிகாலை மீண்டும் மலைப்பகுதிக்கு செல்ல முயன்றன. அப்போது அய்யாசாமி கோவில் அருகே உள்ள தடுப்பணையில் கால்தவறி ஒன்றன் பின் ஒன்றாக விழுந்தன. விடிந்ததும் அந்த பகுதிக்கு சென்ற சிலர் பார்த்தபோது தடுப்பணை சேற்றில் சிக்கி 2 யானைகள் போராடியதை பார்த்து அதிர்ச்ச்சியடைந்தனர்.

    இது குறித்து கோவை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்த உடனே ரேஞ்சர் சுரேஷ்குமார், வனவர் கலையரசன், ஆய்வாளர் சுனிதா, வன ஊழியர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    அப்போது ஒரு காட்டுயானை தானாவே கரையேறி வனப்பகுதிக்குள் சென்றது. 10 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் காட்டுயானை மட்டும் புதர் நிறைந்த சேற்றில் சிக்கியது.

    இருந்தாலும் யானை கரையேற முயன்றது. அதனை மிரள வைத்து தடுப்பணையில் இருந்து வெளியே வர அருகே பட்டாசு வெடித்தனர். இதில் ராஜேந்திரன் (வயது 28) என்ற வன ஊழியருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    யானை தடுப்பணையில் சிக்கியதை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே வந்தனர். பொதுமக்களை கண்டதும் வெளியே வர முயன்ற காட்டுயானை மீண்டும் தடுப்பணைக்குள்ளேயே சென்றது. இது குறித்து துடியலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.

    இந்நிலையில் கால்நடை டாக்டரும் அங்கு வந்தார். ஒரு சில மணி நேரத்திற்குள் தடுப்பணை சேற்றில் சிக்கிய காட்டுயானை மீட்டு வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்படும் என்று வனத்துறையினர் கூறினர்.
    Next Story
    ×